பக்கம் எண் :

472தொல்காப்பியம் - உரைவளம்

அகநானூறு     கலித்தொகை   முதலிய   அகத்தொகைச் செய்யுட்களில் யாண்டும் தலைமக்கள் பெயர்
கூறப்படாமை  கொண்டு,    அகத்திணைப்  பகுதி  கூறும்    செய்யுட்களில்  இயற்பெயர்ச்சுட்டு யாண்டும்
எஞ்ஞான்றும்    கடியப்படுமெனக்    கூறுவாருமுளர், யாரையுங்  குறியாமல் அகத்துறைகளின் செவ்வியைப்
புனைந்துரைப்பதையே   குறிக்கோளாகக்     கொண்ட   தனிச்செய்யுட்    டொகுதிகளில்   எவர்பெயரும்
சுட்டற்கிடமின்மை  வெளிப்படை;  அது    கொண்டு  சிறப்புடையோரின்  சீரிய  காதல் பாடும் புலவர் தம்
செய்யுட்களில்   யாண்டும்   தலைமக்கள்  பெயரே    கூறலாகாதென    விலக்குதல்  அமைவுடைத்தன்று;
அவ்விலக்கிற்கு   முந்தியும்  வழக்கும்    இல்லை.  பெயர்கூறும்  வழக்குண்மை    முன்சூத்திர  உரையிற்
காட்டியன கண்டுணர்க.
 

இனி,    தக்கோர் தலைவராய் அவர் காதற்  செவ்வியே பொருளாக வரும் பாட்டெல்லாம் அவர்பெயர்
குறிப்பதனால்    மட்டும்   அகமாகாதென     மறுக்குமாறில்லை.    புறத்துறைப்   பகுதி   மிகுதியுடைய
பட்டினப்பாலை   காதல்   கண்ணிய   முடிவு    ஒன்று    கொண்டு   அக  நூலாகக்  கருதப்படுங்கால்,
காதலொழுக்கமே  பொருளாய்  வரும்  செய்யுளில்  காதலர்    பெயர்  குறிக்கப்படுவதால் மட்டும் அதைப்
புறமென  விலக்க  விதி யாதும் யாண்டும் தொல்காப்பியர்   கூறவில்லை.  ஆதலால் பெயர்சுட்டுதல் ஒன்று
கொண்டு  கோவலன்-கண்ணகி,  கோவலன்  -  மாதவி,  மணிமேகலை  -  உதயகுமரன், சீதை - இராமன்,
சீவகன்  -  மனைவியர்  முதலியோர்   காதல்   கூறும் பகுதிகளெல்லாம் புறத்திணையின் பாற்படுமென்பது
பொருந்தாக் கூற்றாகும்.
 

இனி,   ‘புறத்தகம்’   என்றொன்றின்மையான்,   ‘அகப்புறம்’     என்றொன்றமைப்பது   தொல்காப்பியர்
யாண்டும் கருதாப் புதிய திணையாமாதலானும், அஃதமைவதன்று.
 

இச்சூத்திரத்தில்,     ‘புறத்திணை’     என்பதை       மேற்சூத்திரத்திற்       கூறிய    அளவளவும்
“அகனைந்திணைப்புறம்”    என    மாற்றிப்   பொருள்கோடல்  வேண்டும். அல்லாக்கால் அகமல்லாப்புறத்
திணைக்குரியதனை  மயக்கத்திற்கிடமாகத்     தொல்காப்பியர்  இவ்வகத்திணையியலில் மறந்து கூறினாரென
அவருக்கு  மற்றொன்று  விரித்த  குற்றம்  சுமத்துவதாக   முடியும்.   ஆதலால் அஃது அவர் கருத்தன்மை
அறிக.