இனி, இங்குத் தொல்காப்பியர் புறத்திணையையே சுட்டுவதாகக் கொள்ளின், அளவளாவிடத்து அகத்திணையுள்ளும் பெயர் சுட்டல் அமையுமென ஐயமகற்றக் கருதி, அது கூறுமிச் சூத்திரத்தில் தலைமக்கள் சுட்டிப் பெயர்கொளப்பெறுதல் புறத்திணைக்கண் கடியப்படாதென்பதையும் “ஒன்றென முடித்தல், தன்னின முடித்தல்” எனுமுத்திகளால் ஈண்டு உடன் கூறினார் என அமைத்தல் வேண்டும். |
ஆகவே, அன்பினைந்திணை மருங்கினும் தலைமக்கள் தம்முள் அளவளவுதல் கூறுமிடத்து மட்டும் ஒருவரை ஒருவர் பெயர் சுட்டல் கடியப்படும் என்பதும், அவ்வாறு அளவுதலின் புறத்து ஐந்தகத்திணைகளிலும், அவற்றின் புறம்பே கைக்கிளை பெருந்திணை என்னும் அகப்பகுதிகளிலும் புறத்திணையில் மக்களின் தூய காதல் கண்ணிய பாடாண் பகுதிக்கண்ணும், அவ்வாறு பெயர் சுட்டுதல் கடிதலில்லையென்பதும், இதுவே அவர்காலப் புலனெறி வழக்காமென்பதும் இவ்விரு சூத்திரங்களாலும் அம்மரபுகளைத் தொல்காப்பியர் விளங்க வைத்தார் என்பது தேற்றம். |
இஃது, அகனைந்திணையேயன்றி இயற்பெயர் சுட்டிக்கூறப்படாதென பிறவுமுள வென்பதும், சுட்டிக் கூறப்படுவன இவையென்பதும் கூறுகின்றது. |
(இ-ள்) புறத்திணையாகிய பாடாண்டிணையைச் சார்ந்து வரும் கைக்கிளை பெருந்திணைகளில் இயற்பெயர் பொருந்தி வரலாமல்லது அகத்திணையைச் சார்ந்து வரும் கைக்கிளை பெருந்திணைகளிலும் அவ்வியற் பெயர் கலந்து வருதல் இல்லை என்பதாம். |
அகத்திணை மருங்கினும் எனவரும் இறந்தது தழீஇய எச்சவும்மை விகாரத்தாற்றொக்கது. |
ஈண்டுமருங்கு என்பது கைக்கிளை பெருந்திணை. கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் என்னும் முதல் நூற்பாவில் நடுவணைந்திணைக்கு முன்னும் பின்னுமாய இருமருங்கும் கைக்கிளை பெருந்திணைகள் கூறப்பட்டிருத்தலால் அவ்விரண்டனையும் மருங்கு என ஆசிரியர் குறித்துள்ளார் மேலே. |