பக்கம் எண் :

474தொல்காப்பியம் - உரைவளம்

அடியோ  பாங்கினும்    வினைவலர்  பாங்கினும்  (அகத்-53)  என்னும் நூற்பாவில் இவ்விரண்டனையும்
புறம் என்றதனையும் நோக்குக.மேலும்.
 

வேட்கை மறுத்துக் கிளந்தாங் குரைத்தல்
மரீஇய மருங்கின் உரித்தென மொழிப

(பொருளியல் நூற்பா-17)
 

மெய்ப்பொருள் மருங்கின் வைத்தனர் வழியே.

(புறத்-நூற்பா-32)
 

என்னும்    நூற்பாக்களிலும் ஆசிரியர் இக்கைக்கிளை,   பெருந்திணைகளை  மருங்கெனக் கூறுதல்  காண்க.
எனவே,    அகத்துறைப்  பாடல்களெல்லாம்   அகனைந்திணை,   அகத்தைச்  சார்ந்து  வரும் கைக்கிளை,
பெருந்திணை    என  மூன்று  பிரிவினுள்  அடங்குமென்பதும், அகனைந்திணையிலும்  அகத்தைச் சார்ந்த
கைக்கிளை,   பெருந்திணைகளிலும்   இயற்பெயர்    சுட்டிக்  கூறலாகாதென்பதும்   புறத்தைச்    சார்ந்த
கைக்கிளை   பெருந்திணைகளில் இயற்பெயர் சுட்டிக்  கூறப்படலாம் என்பதும் இவ்விரண்டு  நூற்பாக்களால்
ஆசிரியர் வரையறுத்துக் கூறினாரெனக் கொள்ளலாம்.

(54)
 

சிவலிங்கனார்
 

இச்சூத்திரம் எய்தாதது எய்துவித்தலும் எய்தியது இகந்து படாமற் காத்தலும் நுதலுகிறது.
  

(இ-ள்)   சுட்டி   ஒருவர்   பெயர்   கூறப்படுதல்  புறத்திணைச்  செய்யுளில்  பொருந்திவருமேயல்லது
அகத்திணைச் செய்யுளில் பொருந்தி வருதல் இல்லை என்றவாறு.
 

‘அகத்திணை  மருங்கில்  அளவுதல்   இலவே’  என்றதனால் அகத்திணை மருங்கின் அளவிவரின் அது
புறத்திணையேயாம் என்பது கூறினாராகக் கொள்க.
 

புறத்திணைக்குப்     பொருந்தும்   என்பது  எய்தாதது எய்துவித்தல்; அகத்திணை மருங்கின் அளவுதல்
இல  என்றது  முன்  சூத்திரத்து  “அகன்  ஐந்திணையுள்  சுட்டியொருவர்  பெயர்  கொளப் பெறார்” என
எய்தியதைத் தவறாமல் காத்ததாம்.
 

இவ்விரு  சூத்திரங்களாற்  சொல்லியது   அகப்பாடற் செய்யுள் செய்வோர் குறிப்பிட்ட ஒருவர் பெயரால்
செய்தலாகாது; பொதுப் பெயராலேயே செய்தல் வேண்டும் என்பதாம்.
 

அகத்திணையியல் உரைவளம் முற்றும்.