பக்கம் எண் :

40தொல்காப்பியம் - உரைவளம்

பாரதியார்
  

3. முதல் கரு..............நாடுங்காலை
  

கருத்து:- இது, அகப்பொருள் முதல்கரு உரிஎனமுத்திறப்படும் மரபு கூறுகிறது.
  

பொருள்:- பாடலுட்   பயின்றவை   நாடுங்காலை  -   புலவர்  செய்யுளில் வந்து பயிலும் வழக்குகளை
ஆராயுங்காலை,   முதல்கரு   உரிப்பொருள்   என்ற    மூன்றே    -    முதற்பொருள்,   கருப்பொருள்
உரிப்பொருளென   வகுத்த   மூன்றுமே;  நுவலுங்காலை  முறைசிறந்தனவே  - செய்யுளுக்குரிய  புலனெறி
வழக்கம் கருதுங்கால் முறையே ஒன்றினொன்று சிறந்தனவாம்.
  

குறிப்பு:-முறை  சிறந்தன  என்பதனால்  முதலிற்  கருவும்,  கருவின் உரியும், ஒன்றினொன்று முறையே
மேற்சிறப்புடைத்தாமெனவும்,  சிறத்தன  என்பதனால்  சிறவாப்  பிறபொருளும்  உளவாமெனவும்  பெறுதும்.
அகப்பாட்டுக்களில்  உரிப்பொருளே   தலையாய   தென்பதும்,   அதற்கு   முதலுங்  கருவும்  சிறப்புதவுந்
துணையாகச் சார்ந்து  வருபொருள்களாமென்பதும்  வெளிப்படை,  இனி,  இம்மூன்றுமேயன்றி  இவைபோலச்
சிறவாத  பிற  பொருளும்   உளவாதல்   அகத்திணையியல்  “மரபு  நிலை,  திரியா மாட்சியவாகி, விரவும்
பொருளும்  விரவுமென்ப”  என்னும்  45-ஆம்  சூத்திரத்தால்  தெளியப்படும்.  இதில்  மூன்றே  என்பதில்
ஏகாரம்   தேற்றமும்    பிரிநிலையுமாம்.   சிறந்தனவே    என்பதிலேகாரம்   இசை   நிறையாக  வேனும்
அசைநிலையாக வேனுங் கொள்ளுக.
  

சிவலிங்கனார்
  

செய்யுள்களுள்     மிகுதியாகப்  பயின்றுவரும்  பொருள்களை  ஆய்ந்துபார்க்குங்  காலத்து  அவற்றை
இலக்கணப்படுத்திச்   சொல்லும்போது   முதற்பொருள்   கருப்பொருள்   உரிப்பொருள்   என்ற  மூன்றே
முறையாகச் சிறந்தனவாம் என்பது இச் சூத்திரப் பொருள்.
  

பாடலுட் பயின்றவை நாடுங்காலை நுவலுங்
காலை முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
முறை சிறந்தன எனக் கூட்டுக.