பக்கம் எண் :

64தொல்காப்பியம் - உரைவளம்

பாரதியார்.
  

8. பனியெதிர்.....................மொழிப
 

பனியெதிர் பருவமு முரித்தென மொழிப.
  

கருத்து :- இது மேலைச் சூத்திரத்திற்கோர் புறனடை; முன்பனியும் குறிஞ்சிக் குரித்தா மெனக் கூறுகிறது.
  

பொருள் :- பனியெதிர்   பருவமும்-முன்பனிக்   காலமும்,   உரித்தென   மொழிப  -  குறிஞ்சித்
திணைக்குரியதெனக் கூறுவர் (புலவர்)
  

குறிப்பு :- பனி  எதிர்பருவம் எனவே, மாலையிற் பனிதோன்றும்  முன்பனிக் காலமாயிற்று. முன்பனிக்
காலமாவது  மார்கழி  தை எனுந்திங்களிரண்டு கொண்ட  பெரும்  பொழுதாம். ‘பருவமும்’ என்பதிலும்மை
குறிஞ்சித்திணைக்குக்  கூதிரேயன்றி இப்பருவமும் உரியதாம் எனப்பொருள்  தருதலால், இறந்தது  தழீஇய
எச்சவும்மை.  ‘மொழிப’  என்பதனால்  அதற்குரிய  எழுவாயான  புலவர்   என்பது  அவாய்  நிலையாற்
கொள்ளப்படும். முன் பனிப்பருவம், கூடற்குரியது. பிரிவரியது, என்பதற்குச் செய்யுள்:
  

“உள்ளார் கொல்லோ, தோழி!
மழைகழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்திமைப் பதுபோல் விளங்குபு மறைய
எல்லை போகிய பொழுதின் எல்லுறப்
பனிக்கால் கொண்ட பையுள் யாமத்துப்
பல்லித ழுண்கண் கலுழ
நில்லாப் பொருட் பிணிப் பிரிந்திசி னோரே.”

  

எனும்   நற்றிணைப்  (241-ஆம்)   பாட்டில்,  பின்  பெயலாகிய  கூதிர்கழிந்த  பின்  முன்பனிப்பருவ
யாமப்பொழுது  குறிஞ்சியாகிய  கூடற்குரிமையும்   பிரிவருமையும்   ஆதலறிக.  “கொண்டலாற்றி” எனும்
நற்றிணைப் (89-ஆம்) பாட்டில்.
  

“மாமழை அழிதுளி கழிப்பிய
வழிபெயற் கடைநாள் இரும்பனிப் பருவத்து
இன்னும் வருமே தோழி, வாரா
வன்க ணாளரோ டியைந்த
புன்கண் மாலையும் புலம்புமுந் துறுத்தே”.

  

என்பதுமது.  இதில்  வழிபெயற்  கடைநாள்  இரும் பனிப்பருவம் எனவே, பின்பெயற் கூதிர் கழிந்த முன்பனி எனத் தெளிக்கப்பட்டது.