யாமமுங் கழியுந்துணையும் அக்கங்குல் வைகுறுதல்; அது கங்குல் வைகிய அறுதியாதனோக்கி வைகறை எனவும் கூறுப. அதுவும் பாடம். நாள் வெயிற் காலையை2 விடியலென்றார். விடியல்வெங் கதிர்காயும் வேயம லகலறை என்ப. விடியல் வைகறை யிடூஉ மூரன் என்றது விடியற்கு முன்னர்த்தாகிய வைகறையென உருபுதொக்கு முன்மொழி நிலையலாயிற்று3, பரத்தையிற் பிரிந்த தலைவன் ஆடலும் பாடலுங் கண்டுங்கேட்டும் பொழுது கழிப்பிப் பிறர்க்குப் புலனாகாமல் மீளுங்காலம் அதுவாதலானும், தலைவிக்குங் கங்குல் யாமங்கழியாது நெஞ்சழிந்து ஆற்றாமை மிகுதலான் ஊடலுணர்தற் கெளிதாவதோர் உபகாரமுடைத்தாதலானும் வைகறை கூறினார். இனித்தலைவி விடியற்காலஞ் சிறுவரைத்தாதலின் இதனாற் பெரும் பயன் இன்றென முனிந்து வாயிலடைத்து ஊடனீட்டிப்பவே அவ்வைகறை வழித்தோன்றிய விடியற் கண்ணும் அவன் மெய் வேறுபாடு விளங்கக் கண்டு வாயில் புகுத்தல் பயத்தலின் விடியல் கூறினார். |