13

xiii
  

காதல்     சூழலின்   சரிபங்கு   தலைவியாதலின்  அப்பாத்திரத்தின்  கூற்று  அகத்திணையில் இல்லாமை
இங்கு  நோக்கத்தக்கது.  அதனை  நிறைவு  செய்யும்  வகையில்  இளம்பூரணர்  ‘எஞ்சியோர்க்கு மெஞ்சுதல்
இலவே’  (45)  என்ற  புறநடை  நூற்பாவிற்கு  உரையெழுதுகையில்  பின்வருமாறு  சுட்டியுள்ளார்: “பாங்கர்
முதலாயினாரை  இச்சூத்திரத்தாற்  கூறுப: தலைமகள்  கூற்றுத்  தனித்துக்கூறல்  வேண்டும்.  இவரோடு ஒரு
நிகரன்மையின்”   எனின்,   ஒக்கும்.  தலைமகள்  கூற்று   உணர்த்திய   சூத்திரம்   காலப்   பழமையாற்
பெயர்த்தெழுதுவார்    விழஎழுதினார்    போலும்,   ஆசிரியர்    இச்சூத்திரத்தாலும்   பொருள்  கொள்ள
வைத்தமையின்,  தலைமகள்  கூற்று  வருமாறு.   தலைமகள்   பிரிதலுற்ற   தலைமகன்   குறிப்புக்  கண்டு
கூறுதலும்  பிரிவுணர்வு  கூறுதலும்,  பிரிவுணர்த்திய   தோழிக்குக்   கூறுதலும்,   உடன்   போவல்  எனக்
கூறுதலும்,  இடைச்சுரத்து  ஆய்த்தார்க்குச்   சொல்லி   விட்டனவும்,   தமர்   வந்துற்றவழிக்   கூறுதலும்,
மீளலுற்ற  வழி ஆயத்தார்க்குக்  கூறிவிட்டனவும்,  பிரிவாற்றாமையும்  ஆற்றுவல்  என்பது படக் கூறுதலும்,
தெய்வம்   பராவலும்   பருவங்கண்டு  கூறுதலும்   வன்புறை   எதிரழிந்து   கூறுதலும்   இவையெல்லாம்
கூறப்படும் (45).
  

உடன்போக்கு
  

தலைவன்     தலைவி  ஆகிய   இருவரின்   குடும்பத்தார்களும்  உடன்படாத  போது,  உடன்போக்கு
நிகழும்.அவ்வாறு   நிகழ்கையில்   தலைமகளை    விட்டு   தலைமகன்   பிரிவது,   தலைமகளை  உடன்
அழைத்துத்  தமர்வரைப்  பிரிவது  ஆகிய  இருவகையான   பிரிவும்   பாலைக்குண்டு.  இந்தக்  கருத்தை
மறுக்கும்   வகையில்,   பாரதியாரின்    (பிரிதலின்   அடங்காமை   என்ற)   கருத்து   அமைந்திருப்பது
சுட்டத்தக்கது (13, 17)
  

தலைவி     தலைவனுடன்   உடன்சென்ற   பிறகு,   இச்செய்தியைத்    தந்தையும்    தன்னையாரும்
உணருமுன்னர்,  அவளைத்  தேடிதாமே  செல்லுவர்   தாயர்.  தாயர்  என்று  பன்மையில் கூறியதன் வழி,
நற்றாயையும்   செவிலியையும்   உட்படக்  குறிக்கும்.   அவ்விருவருள்   நற்றாய்   சேரிக்கும்,  செவிலி
சுரத்திற்கும் தேடச் செல்வர் என்பது நச்சினார்க்கினியர் கூற்று வழி புலப்படுகின்றது (40).