எவ்வாற்றானும் பண்டைச் சான்றோர் பாட்டுபலவற்றுள்ளும் வைகறையும் விடியலும் இருவேறு சிறுபொழுதுகளாமென விதந்து கூறப் பெற்றிருத்தலானும், இச்சூத்திரத்தில் வைகறையையும் விடியலையும் கூறி அவற்றின் வேறாயஎற்பாடும் கூறப்பெறுதலானும், இரவுக்குச் சிறுபொழுது மூன்றாவது போல் பகலுக்கும் சிறுபொழுது உண்மையானும், ஈண்டு வைகுறு, விடியல், எற்பாடு என்பன மூன்றும்முறையே கங்குலிறுதிப் பொழுதான வைகறையும், வெயிலோடு விரிகதிர் விடியலான பகல் முதற் சிறுபொழுதாகிய காலையும் மருதத்துக்கும், பகலிறுதியில் சுடர்படும் பொழுதான எற்பாடு நெய்தலுக்கும் சிறப்புறவருமெனும் உரையே உண்மையுரையாமெனத் தெளிதலெளிதாம். அதனால் நச்சினார்க்கினியரொடு இளம்பூரண அடிகளும் இதுவே இச்சூத்திரப் பொருளாகக் கூறுதல் அமைவுடைத்தாகும். |