கைக்கிளை இன்னதென்பது 3. அவற்றுட் கைக்கிளை யுடைய தொருதலைக் காமம். (இ - ம்.) நிறுத்தமுறையானே கைக்கிளைக்குரிய காமப்பொருள் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேற்சொல்லப்பட்ட அகப்பொருள் விகற்பமாகிய ஏழனுட் கைக்கிளை என்பதனுடைய பொருள் ஒரு தலைக்காமம் என்றவாறு. அவற்றுள் என்பதனை மேல்வருகின்ற சூத்திரம் இரண்டற்குந் தந்துரைக்க. (3) ஐந்திணை இன்னதென்பது 4. ஐந்திணை யுடைய தன்புடைக் காமம். (இ - ம்.) ஐந்திணைக்குரிய காமப்பொருள் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ஐந்திணை என்பதனுடைய பொருள் அன்புடைக் காமம் என்றவாறு. (4) பெருந்திணை இன்னதென்பது 5. பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். (இ - ம்.) பெருந்திணைக்குரிய காமப்பொருள் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) பெருந்திணை என்பதனுடைய பொருள் பொருந்தாக் காமம் என்றவாறு. இவற்றின் விகற்பமெல்லாம் மேலே காட்டப்படும். (5) ஐந்திணையின் பெயர் 6. குறிஞ்சி பாலை முல்லை மருதம் நெய்தல் ஐந்திணைக் கெய்திய பெயரே. (இ - ம்.) நிலம் வகுக்கப்படாத கைக்கிளையும் பெருந்திணையும் ஒழித்து - நிலம் வகுக்கப்படும் ஐந்திணைக்கும் உரிய பெயர் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) குறிஞ்சியும் பாலையும் முல்லையும் மருதமும் நெய்தலும் அவ்வைந்து திணைக்கும் பொருந்திய பெயராம் என்றவாறு.
|