"முல்லையந்தண் பொழில்" எனவும், 'மருதமா நீழல்' எனவும், "பாசடை நிவந்த கணைக்கா னெய்தல்" எனவும் சான்றோரால் எடுத்துக் கூறப்படுதலான் எனக் கொள்க. இவை ஆகுபெயராம். (6) ஐந்திணைக்கும் உரிய பொருள்கள் 7. அவைதாம், முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் எனமுறை நுதற்பொருண் மூன்றினும் நுவலப் படுமே. (இ - ம்.) ஐந்திணைக்கும் உரிய பொதுவாகிய பொருள் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேற்சொல்லப்பட்ட குறிஞ்சி முதலாகிய ஐந்திணைதாம் முதற்பொருளும் கருப்பொருளும் உரிப்பொருளும் என முறையானே கருதுதலையுடைய பொருள் மூன்றானுஞ் சொல்லப்படும் என்றவாறு. என்னை? 1"முதல்கரு வுரிப்பொரு ளென்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறந் தனவே பாடலுட் பயின்றவை நாடுங் காலை" என்றாராகலின். அவைதாம் நுவலப்படும் எனக் கூட்டுக. எனவெனப்படுவது எண்ணிடைச் சொல். (7) முதற் பொருளின் வகை 8. நிலமும் பொழுதுமென முதலிரு வகைத்தே. (இ - ம்.) நிறுத்த முறையானே முதற்பொருளின் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) முதற்பொருளாவது நிலமும் பொழுதும் என இரண்டு கூற்றினை உடைத்தாம் என்றவாறு.
1. தொல், பொருள், அகத்திணையியல் சூ; 3.
|