17

இனி, அவற்றது சிறப்புண்மையும் சிறப்பின்மையும் எற்றாற் பெறுவதெனின், 1"குறிஞ்சி, கூதிர் யாம மென்மனார் புலவர்" எனவும், 2"பனியெதிர் பருவமு முரித்தென மொழிப" எனவும்; 3"நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு, முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே" எனவும்; 4"பின்பனி தானுமுரித்தென மொழிப" எனவுங் கூறிய வதனாற் பெறுதும் எனக்கொள்க.

(14)

முல்லைக்குரிய பெரும்பொழுதும் சிறுபொழுதும்

15. மல்குகார் மாலை முல்லைக் குரிய.

(இ - ம்.) முல்லைக்குரிய பெரும்பொழுதும் சிறுபொழுதும் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மிகாநின்ற கார்காலமும் மாலைக்காலமும் ஆகிய இரண்டு காலமும் முல்லைக்குரிய என்றவாறு.

என்னை?

5"காரு மாலையு முல்லை" என்றாராகலின்.

(15)

மருதத்துக்குரிய சிறுபொழுது

16. இருள்புலர் காலை மருதத்திற் குரித்தே.

(இ - ம்.) மருதத்திற்குரிய சிறுபொழுது உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மருதத்திற்கு விடியற்காலம் உரித்து என்றவாறு.

என்னை?

6"வைகுறு விடியன் மருதம்" என்றாராகலின்.

(16)

1. தொல். பொ. அகத்திணையியல், சூ: 6.

2. தொல். பொ. அகத்திணையியல், சூ: 7.

3. தொல். பொ. அகத்திணையியல், சூ: 9,

4. தொல். பொ. அகத்திணையியல், சூ: 10.

5. தொல். பொ. அகத்திணையியல், சூ: 6.

6. தொல். பொ. அகத்திணையியல், சூ: 8.

'வைகறை' என்பது இளம்பூரணர் கொண்ட பாடம். நச்சினார்க்கினியர் 'வைகுறு' என்று பாடங்கொண்டு அதற்கு இலக்கணங்கூறி வைகறை என்பதும் பாடம் என்றார். அச் சூத்திரத்திற்கு அவர் கூறிய உரையை நோக்குக.