173

வரைவு கடாதலின் விரி

166. வினவிய செவிலிக்குமறைத்தமை விளம்பலும்
அலரறி வுறுத்தலும் தாயறி வுணர்த்தலும்
வெறியச் சுறுத்தலும் பிறர்வரை வுணர்த்தலும்
வரைவெதிர் வுணர்த்தலும் வரையுநா ளுணர்த்தலும்
அறிவறி வுறுத்தலும் குறிபெயர்த் திடுதலும்
பகல்வரு வானை யிரவுவரு கென்றலும்
இரவுவரு வானைப் பகல்வரு கென்றலும்
பகலினும் இரவினும் பயின்றுவரு கென்றலும்
பகலினும் இரவினும் அகலிவண் என்றலும்
உரவோன் நாடும் ஊரும் குலனும்
மரபும் புகழும் வாய்மையும் கூறலும்
ஆறுபார்த் துற்ற அச்சம் கூறலும்
ஆற்றாத் தன்மை ஆற்றக் கூறலும்
காவன்மிக வுரைத்தலும் காமமிக வுரைத்தலும்
கனவுநலி வுரைத்தலும் கவினழி வுரைத்தலும்
எனமுறை நாடி இயம்பிய விருபதும்
வரைவு கடாதல் விரியெனப் படுமே.

(இ - ள்.) வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல் முதலாகக் கவினழிவுரைத்தல் ஈறாகச்சொல்லப்பட்ட இருபதும் வரைவு கடாதல் விரி எனப்படும் என்றவாறு.

அவற்றுள்,

வினவிய செவிலிக்கு மறைத்தமை தலைவர்க்குத் தோழி விளம்பற்குச் செய்யுள்:

1"தளரா விளமுலை தாங்ககில் லாது தளரிடைகண்
வளராத தென்கங்குல் வாரா யெனத்தஞ்சை வாணன்வெற்பா
விளரார் திருநுத லன்னைக்கொர் மாற்றம் விளம்பியுய்ந்தேன்
உளரா மவர்வலை யுட்பட்டு வாழ்வ துணர்ந்தருளே."

என வரும்.



1. த. கோ. செ : 228.