18

நெய்தற்குரிய சிறுபொழுது

17. வெய்யோன் பாடு நெய்தற் குரித்தே.

(இ - ம்.) நெய்தற்குரிய சிறுபொழுது உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) ஆதித்தன் படுகின்ற காலம் நெய்தற்கு உரித்து என்றவாறு.

என்னை?

1"எற்பாடு, நெய்தலாதன் மெய்பெறத் தோன்றும்" என்றாராகலின்.

(17)

மருதம் நெய்தல் என்னும் இரண்டற்குரிய
பெரும்பொழுது

18. மருதம் நெய்தலென் றிவையிரண் டற்கும்
உரிய பெரும்பொழு திருமூன் றும்மே.

(இ - ம்.) மருதத்திற்கும் நெய்தற்கும் உரிய பெரும் பொழுது உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மருதமும் நெய்தலும் என்னும் இரண்டற்கும் பெரும்பொழுது ஆறும் உரியவாம் என்றவாறு.

இஃது எற்றாற் பெறுதும் எனின், 2ஞாபகத்தாற் பெறுதும் எனக் கொள்க. அஃதியாதோ வெனின் 3ஏனை மூன்றற்கும் பெரும்பொழுது கூறிப்போந்து மருதத்திற்கும் நெய்தற்கும் பெரும்பொழுது கூறாததனால் என்க. அதனாற், பெரும்பொழுதாறும் உரியவாம் எனக்கொள்க.

(18)


1. தொல், பொருள், அகத்திணையியல், சூ: 8.

2. ஞாபகங்கூறல்--சூத்திரஞ் செய்யுங்கால் அதற்கு ஓதிய இலக்கணவகையானே சில்வகை யெழுத்தின் செய்யுட்டாகவும் நாடுதல் இன்றிப் பொருள் நளி விளங்கவுஞ் செய்யாது, அரிதும் பெரிதுமாக நலிந்து செய்து மற்று அதனானே வேறு பல பொருள் உணர்த்தல் என்று பேராசிரியர் கூறியதனை நோக்குக. (தொல், பொருள், மரபியல், சூ: 1 10).

3. இது தொல், பொருள், அகத்திணையியலை நோக்கியது என உணர்க. தொல், பொருள், அகத்திணையியலில் 6 முதல் 10 வரையிலும் உள்ள சூத்திரங்களை நோக்குக.