19

கருப்பொருள் வகை

19. ஆரணங் குயர்ந்தோ ரல்லோர் புள்விலங்
கூர்நீர் பூமர முணாப்பறை யாழ்பண்
டொழிலெனக் கருவீ ரெழுவகைத் தாகும்.

(இ - ம்.) கருப்பொருளின் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) தெய்வம் முதலாகத் தொழில் ஈறாகச் சொல்லப்பட்ட பதினான்கு வகையினை உடைத்தாங் கருப்பொருள் என்றவாறு.

என்னை?

1"தெய்வ முணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
இவ்வகை பிறவுங் கருவென மொழிப"

என்றாராகலின்.

மற்று, அக் கருப்பொருள் எண் பதினான்கு என்று வரையறுத்தது என்னை? 2இதனுள் எடுத்தோதப்பட்டது எட்டன்றோ வெனின், ஒழிந்த ஆறும் இச் சூத்திரத்துப் 'பிற' என்னும் இலேசானே பெறப்பட்டன என்க.

(19)

குறிஞ்சிக் கருப்பொருள்

20. விறற்சேய் பொருப்பன் வெற்பன் சிலம்பன்
குறத்தி கொடிச்சி குறவர் கானவர்
குறத்தியர் கிளிமயில் மறப்புலி 3குடாவடி
4கறையடி சீயஞ் சிறுகுடி யருவி
நறுஞ்சுனை வேங்கை குறிஞ்சி காந்தள்
ஆரந் தேக்ககில் அசோகம் நாகம்.


1. தொல், பொருள், அகத்திணையியல், சூ: 18.

2. மேற்காட்டிய தொல்காப்பியச்சூத்திரத்துள்.

3. குடாவடி - கரடி: வளைவாகிய அடியை உடையது என்பது இதன் பொருள்.
குடா - வளைவு.

4. கறையடி - யானை: உரல்போன்ற அடியை உடையது என்பது இதன் பொருள்.
கறை - உரல்.