24

களவுங் கற்புமென உம்மை விரிக்க, கைகோள் என்பது ஒழுக்கம்.

(26)

களவொழுக்கத்தின்கண் நிகழும் புணர்ச்சியின் வகை

27. இயற்கைப் புணர்ச்சி இடந்தலைப் பாடு
பாங்கற் கூட்டம் பாங்கியிற் கூட்டமென்
றுணர்த்திய களவிற் புணர்ச்சிநால் வகைத்தே.

(இ - ம்.) நிறுத்த முறையானே களவென்னுங் கைகோளிற் புணர்ச்சி உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற்சொல்லப்பட்ட களவென்னுங் கைகோளிற் புணர்ச்சி: இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம், பாங்கியிற் கூட்டமென நான்கு வகையினை யுடைத்தாம் என்றவாறு.

என்னை?

1"காமப் புணர்ச்சியும் இடந்தலைப் பாடும்
பாங்கொடு தழாஅலுந் தோழியிற் புணர்வுமென்
றாங்கநால் வகையினு மடைந்த சார்பொடு
மறையென மொழிதன் மறையோ ராறே"

என்றாராகலின்.

(27)

கைக்கிளை நிகழுங் காலம்

28. மெய்க்கிளை யாழோர் வேண்டும் புணர்ச்சிமுன்
கைக்கிளை நிகழ்தல் கடனென மொழிப.

(இ - ம்.) கைக்கிளை நிகழும் இடம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) பொருள்படும் கிளைநரம்பினை உடைத்தாய் யாழினையுடைய கந்திருவர் விரும்பும் களவிற் புணர்ச்சிமுன் கைக்கிளை நிகழ்தல் கடனென்று சொல்லுவர் புலவர் என்றவாறு.

(28)

கைக்கிளை இன்னதென்பது

29. அதுவே,
காமஞ் சான்ற இளமை யோள்வயிற்
குறிப்பறி காறுங் குறுகாது நின்று
குறிப்படு நெஞ்சொடு கூற லாகும்.


1. தொல், பொருள், செய்யுளியல் , சூ: 186.