25

(இ - ம்.) கைக்கிளைக்குரிய இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற்சொல்லப்பட்ட கைக்கிளையாவது காமநுகர் தற்கமைந்த இளமையுடைய தலைமகளிடத் துண்டாகிய குறிப்பினைத் தானறியுமளவும் தலைமகன் அவளைச் சாராது நின்று தன்வசமாகிய நெஞ்சினோடு சொல்லுதலாம் என்றவாறு.

(29)

கைக்கிளைக்குரிய தலைமக்கள்

30. மறையோர் மன்னவர் வணிகர்சூத் திரரெனும்
இறையோர் தத்தமக் கெய்துமற் றதுவே,

(இ - ம்.) கைக்கிளைக்குரிய தலைமக்களை யுணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற்சொல்லப்பட்ட கைக்கிளை; மறையோரும் மன்னரும், வணிகரும் சூத்திரருமாகிய நால்வகைத் தலைமக்கட்கே கூடுவதாம் என்றவாறு.

(30)

இதுவுமது

31. அதுவே,
மொழிந்தோர் நால்வரு மொழிந்தைந் நிலத்துறை
இழிந்தோர் தம்முள் உயர்ந்தோரு மெய்துப.

(இ - ம்.) கைக்கிளைக் கெய்துவதொரு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற்சொல்லப்பட்ட கைக்கிளையை நால்வகைத் தலைமக்களுமன்றி ஐந்து நிலத்தும் உறையும் கீழ்நிலைமக்களுள் தலைமக்களும் பெறுவர் என்றவாறு.

உம்மை இழிவு சிறப்பாதலாற் சிறுபான்மை நோக்கி நின்றது எனக்கொள்க.

(31)

இயற்கைப் புணர்ச்சியின் இலக்கணம்

32. தெய்வந் தன்னின் எய்தவுங் கிழத்தியின்
எய்தவும் படூஉம் இயற்கைப் புணர்ச்சி.

(இ - ம்.) இயற்கைப் புணர்ச்சிக்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.