259

தண்புன லூரன்வந் தானென்று சாற்றினை தானமுறப்
பண்புன லூர்களெல் லாம்பாடி யேற்றுண்ணும் பாண்மகளே."

எனவும்,

1"விளக்கி னன்ன சுடர்விடு தாமரைக்
களிற்றுச்செவி யன்ன பாசடை தயங்க
வுண்டுறை மகளி ரிரியக் குண்டுநீர்
வாளை பிறழு மூரற்கு நாளை
மகட்கொடை யெதிர்ந்த மடங்கெழு பெண்டே
தொலைந்த நாவி னுலைந்த குறுமொழி
யுடம்பட் டோராத் தாயரோ டொழிபுடன்
சொல்லலை கொல்லே நீயே வல்லைக்
கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை
வள்ளுயிர்த் தண்ணுமை போல
வுள்யாது மில்லதோர் போர்வையஞ் சொல்லே."

எனவும் வரும். பிறவும் அன்ன.

விருந்தொடு வந்துழித் தலைமகள் பொறுத்தல்கண்டு தலைமகன் மகிழ்தற்குச் செய்யுள்:

2"புரவே யெதிர்ந்த நமக்கு விருந்தின்று போலவென்றும்
வரவே புணர்ந்தநம் மாதவம் வாழிய வாணன்றஞ்சைக்
குரவேய் கருமுகிற் கொந்தள பாரக் குரும்பைக்கொங்கை
யரவேய் நுடங்கிடை யாள்விழி யூர்சிவப் பாற்றுதற்கே."

எனவும்,

3"தடமருப் பெருமை மடநடைக் குழவி
தூண்டொறும் யாத்த காண்டகு நல்லில்
கொடுங்குழை பெய்த செழுஞ்செய் பேதை
சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப
வாழை யீர்ந்தடி வல்லிதின் வகைஇப்
புகையுண் டமர்த்த கண்ணள் தகைபெறப்
பிறைநுதற் பொறித்த சிறுநுண் பல்வியர்
அந்துகிற் றலையிற் றுடையினள் நப்புலந்து
அட்டி லோளே யம்மா வரிவை
எமக்கே, வருகதில் விருந்தே சிவப்பா ளன்று
சிறியமுள் ளெயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகங்காண் கம்மே."

எனவும் வரும்.



1. நற்றிணை, செ : 310.

2. த. கோ. செ : 396.

3. நற்றிணை, செ : 120.