(இ - ள்.) மேற்சொல்லப்பட்ட நால்வகைப் புணர்ச்சியுள்ளும் இயற்கைப் புணர்ச்சியாவது தெய்வத்தாற் பெறவும் படும்; தலைமகளாற் பெறவும் படும் என்றவாறு. படுமென்றதனை இரண்டிடத்துங் கூட்டிக்கொள்க. (32) இயற்கைப் புணர்ச்சிக்கொரு சிறப்பு விதி 33. இயற்கைப் புணர்ச்சி தெய்வத்தின் எய்துழி முயற்சி யின்றி முடிவ தாகும். (இ - ம்.) இயற்கைப் புணர்ச்சிக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) அவ்வியற்கைப் புணர்ச்சி தெய்வத்தாற் பெறுங்காலத்து முயற்சியின்றித் தானே முடிவதாம் என்றவாறு. எனவே, அப் புணர்ச்சி தலைமகளாற் பெறுங்காலத்து முயற்சியானே முடிவதாகும் என்பதாயிற்று. முயற்சியின்றி முடிவதற்கு விதி, 1"சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி" என்பதாம். (33) களவொழுக்கின்கண் புணர்ச்சி நிகழும் திறம் 34. உள்ளப் புணர்ச்சியு மெய்யுறு புணர்ச்சியுங் கள்ளப் புணர்ச்சியுட் காதலர்க் குரிய. (இ - ம்.) எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. (இ - ள்.) உள்ளத்தாற் புணரும் புணர்ச்சியும், மெய்யுற்றுப் புணரும் புணர்ச்சியு மென்னும் இரண்டுந் தலைமகற்குந் தலைமகட்கும் உரியவாங் களவுப்புணர்ச்சிக்கண் என்றவாறு. கள்ள மென்பது களவு. (34) உள்ளப் புணர்ச்சி நிகழும் காலம் 35. பொருவிறந் தோற்குப் பெருமையும் உரனும் நன்னுதற் கச்சமும் நாணும் மடனும் மன்னிய குணங்க ளாதலின் முன்னம் உள்ளப் புணர்ச்சி யுரிய தாகும். (இ - ம்.) உள்ளப் புணர்ச்சி நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று.
1. தொல், பொருள், களவியல், சூ: 11. அடி - 4.
|