27

(இ - ள்.) பெருமையும், உரனும் தலைமகற்கு நிலைபெற்ற குணமாதலானும்; அச்சமும், நாணும், மடனும் தலைமகட்கு நிலைபெற்ற குணமாதலானும் மேற்சொல்லப்பட்ட இரண்டு புணர்ச்சியுள்ளும் உள்ளப்புணர்ச்சி முன்னிகழ்தற்குரித்தாம் என்றவாறு.

உரனெனினும் அறிவெனினும் ஒக்கும். பெருமையென்பது பழியும் பாவமுமஞ்சுதல், அறிவென்பது தக்கதறிதல். அச்சமென்பது காணாததொன்று கண்டாற் பெண்டிரிடத்து நிகழ்வது. நாணமென்பது பெண்டிர்க் கியல்பாகிய குணம். மடமென்பது பேதைமையெனக் கொள்க. அவை அவர்க்குக் குணமாகியவாறு என்னையெனின்;

1"பெருமையு முரனு மாடூஉ மேன" எனவும்,

2"அச்சமு நாணு மடனுமுந் துறுத்த
நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப"

எனவும் சொன்னாராதலின் எனக்கொள்க.

(35)

மெய்யுறு புணர்ச்சி நிகழுங் காலம்

36. காட்சி முதலாச் சாக்கா டீறாக்
காட்டிய பத்துங் கைவரு மெனினே
மெய்யுறு புணர்ச்சி எய்துதற் குரித்தே.

(இ - ம்.) மெய்யுறு புணர்ச்சி நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) காட்சியும், வேட்கையும் ஒருதலையுள்ளுதலும் மெலிதலும், ஆக்கஞ் செப்புதலும் நாணுவரையிறத்தலும், நோக்குவ வெல்லா மவையே போறலும், மறத்தலும், மயக்கமும் சாக்காடும் என்னும் பத்தவத்தையும் ஒருங்கே நிகழுமாயிற் றலைமகற்கு மெய்யுறு புணர்ச்சி கூடுதற்குரித்தாம் என்றவாறு.

அவற்றுள், காட்சியாவது தலைமகளைத் தலைமகன் தனியிடத்துக் காண்டல். வேட்கையாவது இவளைப் பெறவேண்டும் என்னு முள்ள நிகழ்ச்சி. ஒரு தலையுள்ளுவதாவது, இடை விடாது நினைத்தல். மெலிதலாவது, உடம்பு வாடுதல். ஆக்கஞ் செப்பலாவது தன் னெஞ்சின்கண் வருத்த மிகுகின்ற படியைப் பிறர்க் குரைத்தல். நாணுவரையிறத்தலாவது, நாணத்தின் எல்லையைக் கடத்தல். நோக்குவவெல்லாம் அவையே போறலாவது, காணுமவையெல்லாம் அவளுறுப்புகளே போலத்


1. "தொல், பொருள், களவியல், சூ: 7.

2. தொல், பொருள், களவியல், சூ: 18.