தோற்றுதல், மறத்தலாவது, அறிவு திரிதல். மயக்கமாவது, மோகித்தல். சாக்காடாவது, இறந்துபடுதல். இவற்றுட், சாக்காடொழிந்த வொன்பதும் மேலே காட்டுதும். அஃதேல் இவற்றுக் கிலக்கணம் யாண்டுப் பெறுதுமெனின்: 1"ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப" எனவும், 2"வேட்கை யொருதலை யுள்ளுதன் மெலிதல் ஆக்கஞ் செப்பல் நாணுவரை யிறத்தல் நோக்குவ வெல்லா மவையே போறன் மறத்தன் மயக்கஞ் சாக்கா டென்றச் சிறப்புடை மரபினவை களவென மொழிப" எனவும் வந்த சூத்திரங்களிற் பெறுதும் எனக் கொள்க. (36) களவுப் புணர்ச்சி நிகழும் இடம் 37. 3பகற்குறி இரவுக் குறியெனும் பான்மைய புகற்சியி னமைந்தோர் புணர்ச்சிநிக ழிடனே. (இ - ம்.) குறியின் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) அன்பினால் அமைந்தோர் புணர்ச்சி நிகழிடம் பகற் குறியும், இரவுக் குறியுமென்னும் இரண்டு பகுதியினை உடையவாம் என்றவாறு. (37) பகற்குறி இரவுக்குறிகளின் இலக்கணம் 38. இல்வரை யிகந்தது பகற்குறி இரவுக்குறி இல்வரை இகவா இயல்பிற் றாகும். (இ - ம்.) குறிகட்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) பகற்குறி இல்லினெல்லையைக் கடந்ததாம்: இரவுக்குறி இல்லினெல்லையைக் கடவாததாம் என்றவாறு. (38) களவொழுக்கின்கண் நிகழும் பிரிவின்வகை 39. ஒருவழித் தணத்தல் வரைவிடை வைத்துப் பொருள்வாயிற் பிரிதலென் றிருவகைத் தாகும் நிறைதரு காதன் 4மறையினிற் பிரிவே.
1. தொல், பொருள், களவியல், சூ: 2. 2. தொல், பொருள், களவியல், சூ: 9. 3. பகற்குறி, இரவுக்குறி என்பன பகலிலும் இரவிலும் எய்துதற் குரியன இவை எனக் குறிப்பிடும் இடத்தை உணர்த்தின. (பாடம்) 4. 'மறைவினிற் பிரிவே'
|