(இ - ம்.) களவின்கட்பிரியும் பிரிவுவரையறை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ஒருவழித்தணத்தலும், வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதலுமென இரண்டு பகுதியினை யுடைத்தாம், நிறைந்த காதலையுடைய களவின்கட் பிரியும் பிரிவு என்றவாறு. அவற்றுள், ஒருவழித்தணத்தலாவது, ஓரூரின் கண்ணும் ஒரு நாட்டின் கண்ணும் பிரிதல், வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதலாவது வரைவிடை வைத்துக் காடிடையிட்டும் நாடிடையிட்டும் பொருள்வயிற் பிரிதல் எனக்கொள்க. (39) ஒருவழித்தணத்தலின் இலக்கணம் 40. அவற்றுள், ஒருவழித் தணத்தற்குப் பருவங் கூறார். (இ - ம்.) ஒருவழித் தணத்தற்குரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேற்சொல்லப்பட்ட இரண்டினுள்ளும் ஒரு வழித் தணத்தல் காடிடையிட்டும் நாடிடையிட்டும் பிரியப்படாமையின் இதற்குப் பருவ வரையறை சொல்லார் சான்றோர் என்றவாறு. (40) வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதலின் இலக்கணம் 41. வரைவிடை வைத்துப் பொருள்வயிற் 1பிரிவோர் இருதுவின் கண்ணுடைத் தென்மனார் புலவர். (இ - ம்.) வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் காடிடையிட்டும் நாடிடையிட்டும் பிரிதலின், அஃதிரண்டு திங்களின் இகவாமையை யுடைத்தென்று சொல்லுவ ராசிரியர் என்றவாறு. என்னை? 2"களவினுட் டவிர்ச்சி வரைவி னீட்டந் திங்க ளிரண்டீ னகமென மொழிப" என்றாராகலின். (41)
(பாடம்) 1. பிரிதல். 2. இறையனார் அகப்பொருள். சூ: 32..
|