3

ஆக்கியோன் பெயர் என்பது, நூல்செய்த ஆசிரியரின் பெயராயிற்று; வழி, நூலின் வழியாயிற்று; எல்லை, நூல் நடக்கும் எல்லையாயிற்று, நூற்பெயர், நூலின் பெயராயிற்று, யாப்பு தொகுத்தலும், விரித்தலும், தொகைவிரியும், மொழிபெயர்த்தலும் என்னும் நான்கனுள் ஒன்றனான் நூல்செய்தலாயிற்று; நுதலிய பொருள், நூலாற் கருதப்பட்ட பொருளாயிற்று, கேட்போர், நூல்கேட்டற்கு உரியாராயிற்று; பயன், நூல் கற்றதனாலாய பயனாயிற்று; காலம், நூல்செய்த காலமாயிற்று; களன், நூலரங்கேறிய; அவைக்களமாயிற்று; காரணம், நூல் செய்தற்குக் காரணமாயிற்று. இப்பதினொன்றனுள்ளும் பாயிரச் சூத்திரங்களுள் எடுத்தோதப்படாதன எல்லையும், கேட்போரும், பயனும், காலமும், களனும் என்னும் ஐந்துமாம். அவற்றையும் ஒருவாற்றான் உய்த்துணர்ந்து,1அல்லாத ஆறும் இச்சூத்திரப் பேருரையிற் காண்க.

(இதன் பொருள்) பூமலி....வேண்டலிற் போந்து என்பது, பூ மிக்க நாவலையுடைய பெரிய மேருவினது உச்சியின்கண்ணே திரண்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் வேண்டிக்கொள்கையாலே அங்குநின்றும் போந்து என்றவாறு,

குடங்கை....அடக்கி என்பது, குழிந்த கையாலே விந்தமென்னும் நெடிய மலையினது மிகையைத் தீர்த்து அலைகடலினை அடக்கி எ - று.

(குடங்கையின் என்பதனை யிரண்டிடத்துங் கூட்டிக் கொள்க.)

மலையத்.....தன்பால் என்பது, பொதிய மலையின்கண்ணே இருந்த பெருந்தவத்தோனாகிய அகத்தியன் பக்கத்து எ - று.

இயற்றமிழ்.....பன்னிருவருள் என்பது, இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழுள்ளும் இயலாகிய தமிழைக் கற்ற மாணாக்கர் பன்னிருவருள்ளும் எ - று.

தலைவ....பெரும்பொருள் என்பது, முதல்வனாகிய தொல்காப்பியனால் அருளிச் செய்யப்பட்ட கோடாத பெரிய பொருள் என்னும் நூலுள் எ - று.

அகப்....தழீஇ என்பது, அகப்பொருட்குரிய இலக்கணத்தை உளப்படக் கூட்டிக்கொண்டு எ - று.

இகப்....நோக்கி என்பது, அகப்பொருள் இலக்கணத்தைக் கடவாத சங்கத்தாருடைய செய்யுள்களை ஆராய்ந்து எ - று.


1. இவ்வைந்தும் அல்லாத மற்ற ஆறும்.