30

வரைவு நிகழுங் காலம்

42. களவு வெளிப்படா முன்னும் பின்னும்
விளையு நெறித்தென விளம்பினர் வரைவே.

(இ - ம்.) வரைவு நிகழுங்காலம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) களவு வெளிப்படா முன்னும் களவு வெளிப்பட்ட பின்னும் விளையும் நெறியினை யுடைத்தாம், வரைவென்று சொல்லுவர் புலவர் என்றவாறு.

களவு வெளிப்படா முன்னும் என்றதனாற் களவு வெளிப்பட்ட பின்னுமெனத் தந்துரைக்கப்பட்டது. இவ்வாறுரைத்தற்கு இலக்கணம் யாதோவெனின்?

1"களவு வெளிப்படா முன்னுற வரைதல்
களவு வெளிப்பட்ட பின்னுற வரைதலென்
றாயிரண் டென்ப வரைத லாறே" என்பதாம்.

(42)

களவு வெளிப்படுமுன் நிகழும் வரைவிற்கு இலக்கணம்

43. நான்கு வகைப்புணர்வினுந் தான்றெருண்டு வரைதலும்
பாங்கனிற் பாங்கியிற் றெருளுற்று வரைதலுங்
களவு வெளிப்படா முன்வரைத லாகும்.

(இ - ம்.) களவு வெளிப்படா முன்னிகழும் வரைவுக்கிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற்சொல்லப்பட்ட இயற்கைப்புணர்ச்சி முதலாகிய நான்குவகைப் புணர்ச்சிக்கண்ணுந் தலைமகன்றானே தெருண்டு வரைதலும், பாங்கனாலாதல் பாங்கியாலாதல் தெருட்டப்பட்டு வரைதலுமாகிய அவை, களவு வெளிப்படாமுன் வரைவாம் என்றவாறு.

(43)

களவு வெளிப்பட்டபின் வரைதற்கு இலக்கணம்

44. உடன்போய் வரைதலும் மீண்டு வரைதலும்
உடன்போக் கிடையீ டுற்று வரைதலுங்
களவுவெளிப் பட்டபின் வரைத லாகும்.

(இ - ம்.) களவு வெளிப்பட்டபின் நிகழும் வரைவிற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.


1. இறையனார் அகப்பொருள். சூ: 24.