31

(இ - ள்.) புணர்ந்துடன்போய்த் தலைமகன் தன்னூரின் கண்ணே, வரைதலும், மீண்டுவந்து தம்மூரின்கண்ணே வரைதலும், உடன்போக் கிடையீடுபட்டுத் தலைமகன் தமரை வழிபட்டு வரைதலுமாகிய இவை களவு வெளிப்பட்டபின் வரைதலாம் என்றவாறு.

(44)

உடன்போய் வரைதல்

45. அவற்றுள்,
உடன்போய் வரைதல் ஒருவகைத் தாகும்.

(இ - ம்.) உடன்போய் வரைதல் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற்சொல்லப்பட்ட மூன்றனுள், உடன்போய்த் தன்னூரின்கண்ணே வரைதலாகிய அஃது ஒருவகையினையுடைத்தாம் என்றவாறு.

(45)

மீண்டு வரைதலின் வகை

46. அவண்மனை வரைதலும் தன்மனை வரைதலும்
எனமீண்டு வரைதல் இருவகைத் தாகும்.

(இ - ம்.) மீண்டுவரைதலின் வகை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) தலைமகள் மனையின்கண்ணே வரைதலும் தலைமகன் மனையின்கண்ணே வரைதலும் என இரண்டு வகையினையுடைத்தாம் உடன்போய் மீண்டு தம்மூரின்கண்ணே வரைதல் என்றவாறு.

(46)

அறத்தொடுநிலை நிகழும் இடம்

47. ஆற்றூ றஞ்சினும் அவன்வரைவு மறுப்பினும்
வேற்றுவரைவு நேரினும் காப்புக்கை மிகினும்
ஆற்றுறத் தோன்றும் அறத்தொடு நிலையே.

(இ - ம்.) அறத்தொடுநிலை நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) தலைமகன் வரும்வழியில் உண்டாகும் ஏதத்தினையஞ்சியவிடத்தும், தமர் வரைவு எதிர்கொள்ளாதவிடத்தும், பிறர் வரைவு நேருமிடத்தும், காவல் கைமிகுந்தவிடத்தும் நெறிப்படப் புலப்படும் அறத்தொடுநிலை என்றவாறு.