(இ - ள்.) நற்றாய் அறத்தொடு நிற்குங் காலத்துச் சொல்லாடப்பெறாள் ஆதலின் தலைமகள் தந்தையும், தன்னையும் அவள் குறிப்பினானே அறிவர் என்றவாறு. என்னை? 1"தந்தையுந் தன்னையும் முன்னத்தின் உணர்ப" என்றாராகலின். (52) அறத்தொடு நிற்பார்க்கு வினா நிகழும் இடம் 53. பாங்கி தலைவியை வினவுஞ் செவிலி பாங்கியை வினவும் பாங்கி தன்னையும் நற்றாய் தானும் வினவுஞ் செவிலியிற் பொற்றொடிக் கிழத்தியை உற்று நோக்கின். (இ - ம்.) அறத்தொடு நிற்பார்க்கு வினா நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) தலைமகள்மாட்டு வேறுபாடு கண்டுழிப் பாங்கி முதலாகிய மூவரும் இவ்வாறு வினவப்பெறுவர் என்றவாறு. 'பாங்கி தன்னையும்' என்ற உம்மை 'நற்றாய் செவிலியை வினவுதலன்றி', என்னும் பொருள்பட நின்றது. 'நற்றாய்தானும்', என்னும் உம்மை 'பாங்கியைச் செவிலி வினவுத லன்றி', என்னும் பொருள்பட நின்றது. இவ்வாறு நற்றாய் வினவுவது செவிலியைப் போலத் தலைமகளை உற்றுப் பார்த்தவிடத்து எனக்கொள்க. (53) உடன்போக்கு நிகழ்ந்தவிடத்து அறத்தொடு நிற்றற்கு உரியார் 54. ஆங்குடன் போயுழி அறத்தொடு நிற்ப பாங்கியுஞ் செவிலியும் 2பயந்த தாயும். (இ - ம்.) புணர்ந்துடன் போயினவிடத்து அறத்தொடு நிற்றற்கு உரியாரை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) தலைமகளும், தலைமகனும் புணர்ந்துடன் போயகாலத்து அறத்தொடு நிற்பார் தோழியும், செவிலியும், நற்றாயும் என்றவாறு. ஆங்கென்பது அசை. (54)
1. தொல், பொருள், களவியல், சூ: 46. 2. பயந்தநற் றாயும் என்றும் பாடம்.
|