35

கற்பின் வகை

55. களவின் வழிவந்த கற்பும் பொற்பமை
களவின் வழிவாராக் கற்புமென் றாங்கு
முற்படக் கிளந்த கற்பிரு வகைத்தே.

(இ - ம்.) கற்பின் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற்சொல்லப்பட்ட கற்பு, களவிற் புணர்ச்சி வழியான் வந்த கற்பும், களவிற் புணர்ச்சிவழியின் வாராக் கற்பும் என இரண்டு பகுதியினை உடைத்தாம் என்றவாறு.

அஃதேற் களவின்வழி வந்த கற்பினை முற்கூறியது என்னையெனின்?

"முற்படப் புணராத சொல்லின் மையிற்
கற்பெனப் படுவது களவின் வழித்தே"1

என்றாராகலின்; அதன் சிறப்பு நோக்கி எனக் கொள்க.

(55)

கற்பிற் புணர்ச்சியின் வகை

56, குரவரிற் புணர்ச்சி வாயிலிற் கூட்டமென்
றிருவகைத் தாகுங் கற்பிற் புணர்ச்சி.

(இ - ம்.) கற்பென்னுங் கைகோளிற் புணர்ச்சி வரையறை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) கற்பென்னுங் கைகோளிற் புணர்ச்சி குரவராற்புணரும் புணர்ச்சியும், வாயில்களாற் புணரும் புணர்ச்சியும் என இரண்டு பகுதியினை உடைத்து என்றவாறு.

இவற்றுள், குரவராற் புணரும் புணர்ச்சியாவது, வதுவை கூட்டிப் புணரும் புணர்ச்சி, வாயில்களாற் புணரும் புணர்ச்சியாவது, புலவிதீர்த்துப் புணரும் புணர்ச்சி எனக்கொள்க.

(56)

களவின் வழிவந்த கற்பிற் புணர்ச்சிக்கொரு சிறப்பிலக்கணம்

57.அவற்றுள்
களவின் வழிவந்த கற்பிற் புணர்ச்சி
கிளைஞரின் எய்தாக் கேண்மையும் உடைத்தே
உடன்போய் வரைதலும் உண்மை யான.


1. இறையனார் அகப்பொருள், சூ: 15.