36

(இ - ம்.) களவின்வழி வந்த கற்பிற் புணர்ச்சிக்கு எய்தியதொரு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற்சொல்லப்பட்ட 'இருவகைக் கற்பி'னுள்ளுங் களவின்வழி வந்த கற்பினுட் புணரும் புணர்ச்சி, தலைமகள் சுற்றத்தாராற் பெறப்படாத கோட்பாட்டினையும் உடைத்தாம். புணர்ந்துடன்போய்த் தலைமகன் தன்னூரின்கண்ணே வரைந்து கோடலும் உண்டாதலான் என்றவாறு.

என்னை?

1"கொடுப்போ ரின்றியுங் கரண முண்டே
புணர்ந்துடன் போகிய காலையான"

என்றாராகலின்.

(57)

கற்புக் காலத்துத் தலைவன்பால் நிகழும் நிகழ்ச்சி

58. மறையிற் புணர்ச்சியும் மன்றற் புணர்ச்சியும்
இறைவற் கெய்தலுண் டிருவகைக் கற்பினும்.

(இ - ம்.) தலைமகற்குக் கற்புக் காலத்து நிகழும் ஒழுக்க வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற்சொல்லப்பட்ட இருவகைக் கற்பின்கண்ணுந் தலைமகற்குக் களவிற்புணர்ச்சியும் வதுவைப் புணர்ச்சியும் பொருந்துதலுமுண்டு என்றவாறு.

(58)

தலைவன்பால் நிகழும் அந் நிகழ்ச்சிகளுக்கு உரிய மகளிர்

59. 2காதற் பரத்தையர் காமக் கிழத்தியர்
பின்முறை வதுவைப் பெருங்குலக் கிழத்தியென்
றன்னவர் உரியர் அவையிரண் டிற்கும்.


1. தொல். பொருள், கற்பியல். சூ: 2.

2. காதற்பரத்தையராவார், சேரிப்பரத்தையர்தம் மகளிராய்க் காதலாற் புணர்தற்குரியராவார். காமக்கிழத்தியராவார் ஒருவனுக்கே உரிமைபூண்டவராய்க் காமத்தின்பொருட்டு வரையப்படுவர். பின்முறை வதுவைப் பெருங்குலக்கிழத்தியாவாள் இரண்டாம் மனைவி. (அ. கு., த. க. இவர்களின் புத்துரையை நோக்குக.)