37

(இ - ம்.) அவ்வொழுக்கம் இரண்டிற்குமுரிய மகளிரை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) காதற்பரத்தையர் முதலாகிய மூவகையோருந் தலைமகன் அவ்வாறொழுகும் ஒழுக்கம் இரண்டற்குமுரியர் என்றவாறு.

(59)

அவருள், களவிற்புணர்ச்சிக்கு உரிய மகளிர்

60. அவருட்,
காதற் பரத்தையர் களவிற் குரியர்.

(இ - ம்.) களவிற்குரிய மகளிரை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற்சொல்லப்பட்ட மூவகையோருள்ளுங் காதற்பரத்தையர் களவொழுக்கத்திற்குரியர் என்றவாறு.

(60)

மன்றற்புணர்ச்சிக்கு உரிய மகளிர்

61. ஒழிந்தோர் மன்றற் புணர்ச்சிக் குரியர்.

(இ - ம்.) வதுவைப்புணர்ச்சிக்குரிய மகளிரை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) காமக்கிழத்தியும், பின்முறை வதுவைப் பெருங்குலக் கிழத்தியுமாகிய இருதிறத்தோரும் வதுவைப் புணர்ச்சிக்குரிய மகளிர் என்றவாறு.

(61)

கற்பில் நிகழும் பிரிவின் வகை

62. பரத்தையிற் பிரிதல் ஓதற்குப் படர்தல்
அருட்டகு காவலொடு தூதிற் ககறல்
உதவிக் கேகல் நிதியிற் கிகத்தலென்
றுரைபெறு கற்பிற் பிரிவறு வகைத்தே.

(இ - ம்.) கற்பிற் பிரியும் பிரிவின் வரையறை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) பரத்தையிற் பிரிதல் முதலாக நிதியிற்கிகத்தல் ஈறாக ஆறு வகையினை யுடைத்தாங் கற்பின்கட் பிரியும் பிரிவு என்றவாறு.