38

என்னை?

1"ஓதல் காவல் பகைதணி வினையே
வேந்தர்க் குற்றுழி பொருட்பிணி பரத்தையென்
றாங்கவ் வாறே யவ்வயிற் பிரிவே"

என்றாராகலின். அஃது ஈண்டுப் பரத்தையிற் பிரிவு முற்கூறியது என்னையோ? எனின், அது தொல்காப்பியனாரது துணிபு எனக்கொள்க.

(62)

பரத்தையிற் பிரிவின் வகை

63. 2அயன்மனைப் பிரிவயற் சேரியின் அகற்சி
புறநகர்ப் போக்கிவை புரவலற் குரிய
பரத்தையிற் பிரியும் பருவத் தான.

(இ - ம்.) தலைமகற்குரிய சில தொழில் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) அயன்மனைப்பிரிவு முதலாகிய மூன்றுபிரிவும் தலைமகற்குரியனவாம் பரத்தையிற் பிரியுங்காலத்து என்றவாறு.

(63)

அயன்மனைப் பிரிவுக்குக் காரணம்

64. கெழீஇய காமக் கிழத்தியர் பொருட்டாத்
தழீஇய அயல்மனைத் தலைவன் பிரியும்.

(இ - ம்.) நிறுத்தமுறையானே அயல்மனைப்பிரிவுக்கு ஏது உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) பொருந்திய காமக்கிழத்தியர் காரணமாகத் தலைமகன் தொடர்ந்து அயல்மனைக் கண்ணே பிரியும் என்றவாறு.

(64)

அயற்சேரிப் பிரிவுக்குக் காரணம்

65. பின்னர் வரைந்த பெதும்பையும் பரத்தையும்
இன்னியல் விழவும் ஏது வாக
அவனயற் சேரியின் அகலும் என்ப.

(இ - ம்.) அயற்சேரியிற் பிரிவுக்கு ஏது உணர்த்துதல் நுதலிற்று.


1. இறையனார் அகப்பொருள், சூ: 35.

2. அயல்மனைக்குத் தலைவியைப் பிரிந்து செல்லல் எனவும், அயற்சேரிக்குத் தலைவியைப் பிரிந்து செல்லல் எனவும் பொருள் கொள்க.