(இ - ள்.) இரண்டாவது வரைந்துகொள்ளப்பட்ட பெதும்பைப்பருவக் கிழத்தியும், காதற்பரத்தையும், இனிய தன்மையுடைய விழவும் காரணமாகத் தலைமகன் அயற்சேரியின் கண்ணே பிரியும் என்றவாறு. (65) புறநகர்ப் போக்குக்குக் காரணம் 66. விருந்தியற் பரத்தையைப் பெருந்தேர் மிசைக்கொண் டிளமரக் காவின் விளையா டற்கும் புனலா டற்கும் புறநகர்ப் போகும். (இ - ம்.) புறநகர்ப்போக்குக் கேதுவுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இளமரக்காவின்கண்ணே விளையாடுதல் காரணமாகவும் புனலாடுதல் காரணமாகவும் தலைமகன் புதியளாகிய பரத்தையைத் தேர்மேல் ஏற்றிக்கொண்டு நகர்ப்புறத்திலே போவான் என்றவாறு. நகர்ப்புறம் என மாறுக. (66) தலைவிக்கு ஊடல் நிகழும் இடம் 67. ஊடல் அவ்வழிக் கூடுங் கிழத்திக்கு. (இ - ம்.) தலைமகளுக்கு ஊடல் நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) அம் மூன்று பிரிவின்கண்ணுந் தலைமகட்கு ஊடல் பொருந்தும் என்றவாறு. (67) ஊடலைத் தணிக்கும் வாயில்கள் 68. கொளைவல் பாணன் பாடினி கூத்தர் இளையர் கண்டோர் இருவகைப் பாங்கர் பாகன் பாங்கி செவிலி அறிவர் காமக் கிழத்தி காதற் புதல்வன் விருந்தாற் றாமை யென்றிவை ஊடல் மருந்தாய்த் தீர்க்கும் வாயில்கள் ஆகும். (இ - ம்.) மேற்சொல்லப்பட்ட வாயில்களாவன இவையென்பது உணர்த்துதல் நுதலிற்று.
|