அணிந்துரை |
முனைவர் ச. அகத்தியலிங்கம், |
எம். ஏ., பிஎச். டி., (கேரளா) பிஎச். டி., (இந்தியானா அமெரிக்கா) |
துணைவேந்தர் |
தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர். |
பேராசிரியர் ச.பாலசுந்தரம் அவர்கள் எழுதியுள்ள தொல்காப்பியம் எழுத்ததிகாரம் ஆராய்ச்சிக் காண்டிகையுரை என்ற நூலினைப் படித்து மகிழ்ந்தேன். |
இலக்கணப் படிப்பும் இலக்கண அறிவும் குறைந்து வரும் இந்நாளில் இத்தகைய நூல் வெளிவருவது வரவேற்கத் தக்க ஒன்றாகும். பல ஆண்டுகள் தொல்காப்பியப் பெருநூலைப் புலவர் வகுப்புக்கும் பிற வகுப்புக்களுக்கும் கற்பித்த நிலையில் அவருடைய சிந்தனையில் உருவான பல எண்ணங்களையும், செய்திகளையும் இந்நூலில் தந்துள்ளார். முன்னுரை, எழுத்தியல் கோட்பாடுகள் என்ற தலைப்புக்களில் இவர் தரும் விளக்கங்கள் இவருடைய இலக்கணப் புலமையைக் காட்டுவதாக உள்ளன. தொல்காப்பியச் சூத்திரங்கள் பலவற்றுக்கு இவர் தரும் புதிய விளக்கங்களும், உரையாசிரியர்கள் எழுதிய உரைகளை ஒப்புமைப்படுத்திச் சொல்லும் சில ஒப்புமைச் செய்திகளும் இந்நூலுக்கு அணி சேர்ப்பவையாக அமைகின்றன. மரபிலக்கண அறிவோடு தமிழ்ச்சிந்தனையில் எழும் இக்கால எண்ணங்களையும் இவர் ஆங்காங்கே கொடுத்திருப்பது போற்றுதற் குரியதாகும். மரபிலக்கண அறிவு எங்கே மாய்ந்துவிடுமோ என்று கவலைப்படுகின்ற உள்ளங்களுக்கு ஆறுதல் தரும் வகையில் இவருடைய நூல் அமைந்துள்ளது. |
இலக்கணத்திலும் இலக்கணப் படிப்பிலும் நாட்டம் உடையவர்களுக்கு இந்நூல் நன்கு பயன்படும் என எண்ணுகிறேன். மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நிச்சயமாக இந்நூல் பல வழிகளில் உதவும். இந்நூலாசிரியருக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள். |
தஞ்சாவூர் |
31-8-88 ச. அகத்தியலிங்கம் |