ஆய்வு அறிமுகவுரை
 

பண்டித, வித்துவான்

பேராசிரியர் தி. வே. கோபாலையர்(புதுச்சேரி)
 

ஆசிரியர்  பாலசுந்தரனார்   தொல்காப்பிய  எழுத்துப்  படலத்துக்குப்
பழிப்பில் சூத்திரம் பட்டபண்பினைக் கரப்பின்று குறித்து ஏது  நடையினும்
எடுத்துக்காட்டினும்   மேவாங்கமைந்த   மெய்ந்நெறிக்   காண்டிகையினை
ஒருமுறை முழுதும் நோக்கும்  வாய்ப்பு நல்கப்  பெற்றேன்.  தம்  காலத்து
வழக்கும் செய்யுளும் நாடி நிலமும்  புலமும்  கண்டு  போக்கறுபனுவலாகத்
தொல்காப்பியனார்     தொகுத்தளித்த       நூற்கு     அவர்காலத்தில்
உரைவரையப்பெறவில்லை.   நூல்   தோன்றி  ஆயிரத்துக்கும்  மேற்பட்ட
ஆண்டுகள்  கழிந்த   பின்னரே   அதற்கு   உரைவேண்டியதன்  தேவை
நன்மக்களான்   உணரப்பெற்றது.     தமக்குமுற்பட்டுத்  தமிழிற்றோன்றிய
புலங்களையும் நிலங்களையும்  மனத்துக்  கொண்டு  தம்  காலவழக்கையும்
நோக்கி  அன்றைய   சான்றோர்கள்   வரைந்த  உரைகள்  இக்காலத்தார்
தொல்காப்பியம்  பயில  உதவுவனவேயன்றி  அந்நூல்கருதிய  செய்திகளை
முழுமையாகத் திரிபின்றி உணருதற்கு உதவுவன அல்ல. இதனைக் கருத்துக்
கொண்டே   இந்நூற்றாண்டின்     தொடக்கந்தொட்டுச்  சான்றோர்  சிலர்
தொல்காப்பியத்துக்குக்   குறிப்புரை,   ஆராய்ச்சியுரை,  பிற  நூல்களோடு
ஒப்பிட்ட உரை முதலியன இயற்றியுள்ளனர். சொல்லின் தொல்லுருவம் பற்றி
ஆராய்ச்சிகளும் மொழிநூற்செய்திகள் பலவும் கல்வி வல்லார் உள்ளங்களை
ஈர்க்கத்   தொடங்கிவிட்டன.    இத்தகைய    சூழ்நிலையில்    ஏறத்தாழ
நாற்பதாண்டுகள் தொல்காப்பியத்தைப்  பயின்றும்  பயிற்றியும்  அந்நூலில்
தோய்ந்து, அதற்குப்பலரும் உரைத்த  உரைகள் பலவற்றையும்  மொழிநூல்
அடிப்படையில்  ஆய்ந்து  தம்  நுண்மாண்  நுழைபுலத்தால்  தாம் கண்ட
செய்திகளை   அமைத்து    ஆசிரியர்   பாலசுந்தரனார்   தொல்காப்பிய எழுத்துப்படலத்துக்கு உரை வெளியிட்டுள்ளார்.
 

உரை  சுருக்கமாக  வெற்றெனத்  தொடுத்தல்,  மற்றொன்று  விரித்தல்
முதலிய  சிதைவுகளுக்கு  இடனாகாது  இனிய  நடையில் அமைந்துள்ளது.
மொழிநூற்கருத்துக்களும்  சொற்களின்   தொல்லுருவ  ஆராய்ச்சி  பற்றிய குறிப்புக்களும் தேவையான இடங்களிற் சுட்டப்பட்டுள்ளன.