பிறநாட்டறிஞர் மனங்கொள உணர்த்தவும், அவரகத்துச் சிறப்பாக உள்ளவற்றைத் தெரிந்துவரவும் பிரிவான் என்றும், பொருளிலக்கணம் கூறுகின்றது. இந்நிலையில்தான் வடமொழி பொதுமொழியாகப் பயன்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறு பிறநாட்டகத்துச் சென்று திரட்டிய கருத்துக்களுள் சிறந்தனவற்றையும் உலக முழுமைக்கும் எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்துக்களையும், யாவரும் கற்றுணரும் வண்ணம் வடமொழியிற் பதிவு செய்திருத்தல் வேண்டும். தலைச்சங்ககாலத்தில் தெற்கே தமிழும் வடக்கே பிராகிருதமும் ஆரியமும் உள்நாட்டு மொழிகளாக அமைந்து அவை வட்டாரந்தோறும் சிறிதுசிறிது மாறுபட்டு வழங்கினமையின் ஆரியத்தின் அடிப்படையில் பிராகிருதத்தையும் தமிழையும் கலந்து செம்மையாகச் செய்து கொள்ளப் பட்ட சமஸ்கிருதமென்னும் வடமொழி, அக்காலையாவர்க்கும் பொது மொழியாக விளங்கியது எனலாம். | எனவே, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சிறப்புக்கள், அவ்வந்நாட்டிற்குரிய சமய சமுதாயப் பண்பாட்டு நாகரிக நெறிமுறைகள் ஆயவற்றை ஒருசேரத் தொகுத்துப் பேரறிஞர்கள் நூல் செய்திருத்தல் வேண்டும். அவற்றுள் சில சிறப்புடையவாய் விளங்கியிருக்கும். ஒருவர் யாதாயினும் ஒருதுறைபற்றி அறியவோ, நூலியற்றவோ முற்படின் அந்நூல் அவர்க்குப் பெரிதும் துணைபுரிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. | இவ்வகையில் தமிழகத்துத் தோன்றிய பொது நூல்களுள் அறம் பொருளின்பம் வீடாகிய நான்மறை பற்றியும், அவற்றை வெளியிடும் இலக்கிய மரபு இலக்கண மரபு பற்றியும் உலகில் உள்ள பல்வேறு தேயத்து மக்களின் கோட்பாடு பற்றியும் மிகத் தெளிவாக விளக்கும் நூலாக இந்த ஐந்திரநூல் விளங்கியிருத்தல் வேண்டும். இந்நூல் அளவாலும் கருத்துக்களாலும் மிகப்பரந்து பட்டதாகவும் இருந்திருத்தல் வேண்டும். அதனை முற்றக் கற்றுத் தெளிதல் யாவர்க்கும் அரிதாகலின் யாதாயினும் ஒரு துறைபற்றி நூலியற்றப் புகுவோர் அந்நூலுள் அப்பகுதியை மட்டும் கற்றுத் தெளிந்திருப்பர். அவ்வாறன்றி அந்நூல் முழுமையும் கற்றுத் தெளிந்தவராய்த் தொல்காப்பியர் விளங்கியமையின் அவ்வருமையும் பெருமையும் நோக்கிச் சான்றோர் யாவரும் இவரைப் போற்றியிருத்தல் வேண்டும். அதனால், அஃதொன்றை மட்டும் சுட்டிப் பனம்பாரனார் சிறப்பித்தார் எனலாம். இவ்வாறு கொள்ளாக்கால் தமிழ் மொழியாளர்க்கு மட்டும் பயன்படும் தொல்காப்பியத்தைக் கொண்டு மல்குநீர் வரைப்பு முழுதும் பல்புகழை நிறுத்தினான் |
|
|