எனல் உயர்வுநவிற்சியாக முடியும். இதனான் முன்னர்ப் பரவியிருந்த புகழைத் தொல்காப்பியத்தைச் செய்து நிலை நிறுத்தினான் என்பதே அளவை முறைக்கு ஏற்றதாகும் என்க. |
இனி இவ் ஐந்திரநூலைத் தமிழகத்துத் தமிழ்ச் சான்றோர் பலரே, வடமொழியில், இயற்றியிருத்தல் வேண்டும். ஏனெனின், வேதமுதலாக வடமொழி நூல் பலவற்றிற்குத் துணைபுரிந்த இந்நூலை வடவர்கள் போற்றிப்பாதுகாவாமையோடு பாணினீயம் தோன்றியபின் முழுதும் வழக்கொழியச் செய்துள்ளமையானும், மருதநிலத் தெய்வமாகிய வேந்தன் என்னும் சொல்லே வடமொழி மரபிற்கேற்ப இந்திரன் என ஆகியுள்ளமையானும், (வடமொழியுள் வரும் இந்திரன் வேறு) தலைச்சங்கத்தைப் புரந்த மன்னர்களுள் ஒருவன் தலைச்சங்கப் புலவர்களின் துணையோடு இவ்அரிய பெரிய நூலைச் செய்திருத்தல் வேண்டும். இதனை ‘‘இந்திரத்தை இனிதாக ஈந்தார் போலும்’’ எனவரும் அப்பர் திருவாக்கான் உணரலாம். அப்பரடிகளின் அருள்வாக்கில் இவ்வாறு தோன்றியமைக்குக் காரணம் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள் தலைச்சங்கத்து வீற்றிருந்தார் என்னும் வரலாறேயாம். அதனான் அக்கடவுளருளால் அவ்வேந்தன் இதனைச் செய்திருத்தல் வேண்டுமென்க. எனவே இறைவன் இதனைச் செய்து இந்திரனுக்கு (வேந்தனுக்கு) அருளியது என்னும் பொருள்பட ஐந்திரம் எனப் பெற்றதெனலாம். இந்நூலுள் எழுத்து சொல் பொருள் யாப்பு ஆய இலக்கணங்கள் மட்டுமன்றி இம்மை மறுமைக்குரிய எல்லாப்பொருளும் பற்றிய கருத்துக்களும் நிரம்பியிருத்தல் வேண்டும். இதனைப், |
‘‘புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின் |
மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய்’’ |
என்று மாங்காட்டு மறையோன் கூறியதைச் சமயச் சார்பு காரணமாக மறுத்த கவுந்தியடிகள். |
‘‘கப்பத் திந்திரன் காட்டிய நூலின் |
மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய்’’ |
எனக் கூறுதலின், ஐந்திரம் அருகக்குமரன் அருளிச்செய்த பரமாகமத்தைப் போன்றது என அறியலாம். இந்நூலைப்பற்றி இளங்கோவடிகள் காலத்துச் சிறிது தெரிந்தவர்கள் இருந்து அப்பரடிகள் காலத்து அருகினர் எனப் புலனாகின்றது. |
இந்நூல் பல நாடுகளில் உள்ள பண்பாடுகளையும் சிறப்புக்களையும் விளக்குவதாக அமைந்திருத்தல் வேண்டுமென்பதைத் |