நூன்மரபு71

தொல்காப்பியம்
 

எழுத்ததிகாரம்
 

1. நூன் மரபு
 

உரைப்பாயிரம்:
 

எழுத்ததிகாரம்  என்பது  ஆறாம்  வேற்றுமைத்தொகைமொழி.  அஃது
எழுத்தினது அதிகாரம்  என  விரியும்.  இத்தொகைச்சொல்  அன்மொழித் தொகையாய் எழுத்தினது இலக்கணங்களைக்  கூறும்  படலத்தை உணர்த்தி நின்றது.
 

எழுத்து:  என்பது  ‘எழுப்புதலுடையது’  என்னும்  பொருள்   தரும்
கருவிப்பெயர். அஃது ஈண்டுச் செவிப்புலனாகும்  ஒலியெழுத்தைச்  சுட்டிக், கட்புலனாகும் வரிவடிவத்திற்கும்  உரியதாக  நிற்றலின்  காரணப்பெயராம். சாத்தன் என்பான் ஒருவனின் உடம்பு, உயிரும்  உணர்வுமாகத்திகழும் அச்,
சாத்தனைச்சுட்டி  உணர்த்துமாறுபோல,  அது  வரிவடிவுற்று  நின்று  ஒலி உருவை உணர்த்தும் தன்மைத்தாய் இலக்கணக் குறியீடாக அமைந்தது.
 

அதிகாரம்மிக்குச்செல்லுதல்.  அஃதாவது,    ஆட்சி   கொள்ளுதல். அஃது   ஈண்டு  எழுத்திலக்கணத்தது   ஆட்சி   எல்லையைக்  குறித்து  நிற்றலின் காரணப்பெயராயிற்று.
 

ஆசிரியர்  இவ்வதிகாரத்துள்,  இசையானும்  ஒலியானும்  ஆக்கமுற்றுச்
செவிப்புலனாகும் எழுத்துக்களின் பெயர்,  தொகை,  வகை,  விரி,  முறை,
ஒலியளவு, ஒலிமயக்கமாதல்,  உரு, தன்மை,  வடிவுகொள்ளும் முறையாகிய
பிறப்பமைதி    ஆகியவற்றையும்;    அவ்வெழுத்துக்கள்    மொழியாதல்,
மொழிக்கண் நிற்கும் முறைமை, அவை ஈறும்முதலுமாகப் புணரும்  இயல்பு,
திரிபுறும் மரூஉநிலை ஆகியவற்றையும் அறிவியல்நோக்கொடு  ஆராய்ந்து,
அம்முடிபுகளை    நூன்மரபு     முதலாக     ஒன்பது    இயல்களாகப்
பகுத்துணர்த்துகின்றார்.
 

எழுத்தானாகும்      சொற்களைப்        பொருளுணர்த்துதற்கேற்பத்
தொடர்களாக்கிச்   செய்யுள்   (இலக்கியம்)  செய்து  கோடல்  மொழியின் பயனாதலின், அத் தொடர்மொழிகளை  ஆக்கிக்  கொள்ளும்  கருவியாகிய சொற்களையும், அவற்றிற்கு அடிப்படைக்  கருவியாகிய  எழுத்துக்களையும் ஆராய்தல்  முறைமை.  ஆதலின்,  எழுத்திலக்கணம் முதற்கண்  ஆராயப் படலாயிற்று.