xiii
 

முன்னுரையும்  தொல்காப்பிய   எழுத்தியற்  கோட்பாடுகளும்  ஊன்றி
நோக்கத்தக்கவை.     இவற்றில்    தமிழ்மொழிக்கு    அடைகள்    பல
புணர்க்கப்பட்டுள்ளதன்  நயம்,   மெய்யெழுத்துக்கள்   மொழி  முதற்கண்
வாராமைக்குரிய காரணம், மொழியை இலக்கணத்தான்  செம்மை செய்வதன்
நோக்கம், முத்தமிழ் என்பதன் அறிவார்ந்த விளக்கம்,  பண்டைய உரைகள்
அமைந்துள்ள   நிலையும்     இவ்வுரை    இயற்றுதற்காங்    காரணமும்
புறத்தெழுவளியின்  நாதம்-இசை, ஒலி,  ஓசை என முத்திறப்படுதல், உயிர்,
புள்ளிமெய்,   உயிர்மெய்,   குற்றியலிகரம்,    குற்றியலுகரம்,    ஆய்தம் என்பவற்றின் இயல்பு, உயிர், மெய் இவற்றின் நீட்டங்களும் குறுக்கங்களும்,
எழுத்து, உயிர், மெய் இவற்றின்  முழுமையான இலக்கணம், சொல், மொழி
என்ற   இரண்டன்   வேறுபாடு,   அல்வழி,  வேற்றுமை என்ற புணர்ச்சி வேறுபாட்டிற்கு மெய்ப்பாட்டுணர்வே  காரணமாகும்  என்பதன்  விளக்கம்,
மெய்பிறிதாதல்,   மிகுதல்,   குன்றல்   என்ற  மூன்றுவகைத்  திரிபுகளின்
விளக்கம்,  ஒலியழுத்தமுடைய  வன்கணமே   பெரும்பாலும்  புணர்ச்சியில்
மிக்குவரும்  என்பது, பெரும்பாலும்  திரிபு நிகழ்வன லள, னண, தந என்ற
ஆறு எழுத்துக்களே என்பதன் விளக்கம், புணரியலில் அல்வழி, வேற்றுமை
இவற்றின் இடம்,  எழுத்துக்களின்   ஒலிவடிவம்  வரிவடிவம்   ஆகியவை
குறிப்பிடப்பட்டுள்ளன.
 

ஒவ்வோரியலின்   தொடக்கத்தும்   அவ்வியலுக்கு   வழங்கப்பட்டுள்ள
பெயர்க்காரண   விளக்கம்,   பண்டைய   உரைகளை   விட   இதன்கண்
தெளிவாகக்   குறிப்பிடப்பட்டுள்ளது.     இவற்றை    ஊன்றி    நோக்கி உளங்கொள்ளும்   இயல்பினரே   இவ்வுரையினை   அரில்தபப்  பயிலும் தகுதியை ஓரளவு பெறுதல் கூடும்.  இவ்வுரையை  முற்றஉணரும்  வாய்ப்பு
இவ்வாசிரியர்    இதன்கண்      குறிப்பிட்டுள்ள    சார்பெழுத்துக்களின் ஆய்வுக்கட்டுரை  (பக். 14, 125)   மெய்ம்மயக்க  ஆய்வுக்கட்டுரை  (பக்.15)
எழுத்து வரையறைத் தனிக்கட்டுரை (பக்.21) உயிர்,  மெய்  எழுத்துக்களின்
தொகை,   அமைப்பு    முதலியன    பற்றிய    தனிக்கட்டுரை  (பக்.20)
எழுத்துக்களின் குறியீட்டு  விளக்கக்கட்டுரை  (பக்.78) ஐகார  ஒளகாரங்கள்
என்னும் கட்டுரை (பக்.115)  குற்றியலுகர   ஆய்வுக்   கட்டுரை   (பக்.202)
மூவிடப்பெயர்   ஆய்வுரை   (பக்.276)   என்ற   கட்டுரைகளைப் பயிலும்
வாய்ப்புப் பெற்ற பின்னரே ஏற்படும்.   எனினும்   நூலுரையை  நோக்கிப்
பெற்றுள்ள அறிவு கொண்டு அதன் நலன்களைச் சிறிது காண்போம்.
 

இவ்வுரையுள்  தொல்காப்பிய நூற்பாக்களின் சொற்கள், சொற்றொடர்கள்
சிலவற்றிற்குப்  புதிய  பாடங்கள் வழங்கப்பட்டுள்ளன. முதற்கண் அவற்றை
நோக்குவோம்.