இதனுள் பாயிரம் என்பதன் பொருள் முதலில் ஆராய்ந்து உரைக்கப்படுகிறது. தமிழ்கூறும் நல்லுலகம், எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி, செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல்கண்டு, மயங்காமரபின் எழுத்துமுறை காட்டி - என்ற தொடர்களுக்குப் பிறர் கூறிய உரைகளை மறுத்து இவ்வாசிரியர் தரும் விளக்கம் பொருள் செறிந்தது. நான்மறை, ஐந்திரம் இவைபற்றிய ஆய்வுரை சுவை நிறைந்தது. தொல்காப்பியன் என்ற பெயர்பற்றிய ஆராய்ச்சி ஊன்றி நோக்கத்தக்கது. இப்பாயிர உரை இவ்வுரையாசிரியரின் இலக்கணப் புலமையைப் பட்டாங்கு அறிதற்கு நல்ல எடுத்துக்காட்டாக இலங்குகிறது. |