அதனான் உரசொலியல்லாத யகரமும் வகரமும் அரை உயிராய்க் குற்றியலிகரத்திற்கும் குற்றியலுகரத்திற்கும் அடியாக நிற்குமென்க. |
சூ. 22: | அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின் |
| மெய்ம்மயக் குடனிலை தெரியுங் காலை |
(22) |
க-து: | மேற்கூறிய மெய்களின் ஒலி மயங்கியும் வரும் என மெய்ம்மயக்கத்திற்குத் தோற்றுவாய் செய்கின்றது. மயக்கம் - ஒலித்திரிபு. |
பொருள்: வளியிசையானும் பிறப்புமுறையானும் மூவகையனவாக மேல்ஓதப்பெற்ற பதினெட்டு மெய்களும், மொழிக்கு உறுப்பாக வழக்குப்பெற்று இயலுமிடத்து, ஒன்றொடுஒன்று தொடர்ந்து நிற்றலான் மெய்யொலி மயங்குதலை ஆராயுமிடத்து.......................... |
இச்சூத்திரம் மேல்வரும் சூத்திரங்களுக்கு அவாய் நிலையாய் இயைந்து பொருள் விளங்கும் அதிகாரச்சூத்திரமாகும். |
நிற்கின்ற புள்ளியெழுத்தின் முன்வரும் உயிர்மெய்யினது மெய்யொலியே மயக்கமெய்துதலின் ‘‘மெய்ம்மயக்கம்’’ என்றார். அவை பிறிதொருமெய்யுடன் சேர நிற்குங்கால் மட்டுமே ஒலித்திரிபுற்று மயங்கலின் உடனிலை மெய்ம்மயக்கம் என்றார். ஒப்பக்கூறல் என்னும் உத்தியான் ஈண்டுவிதந்து கூறப்படும் மெய்களே மொழிக்கண்ணும் உடன்நிற்கும் என்பதையும் பெறப்படவைத்தார். இங்ஙனமே ஒலியெழுத்திற்குக் கூறப்படும் இலக்கணம் வரிவடிவத்திற்கும் ஒக்குமாறு இவர் கூறுதலை முன்னும் பின்னும் நோக்கியறிக. இது தமிழிலக்கணம் கூறும் முறையில் அமைந்த தனிச்சிறப்பாகும். இவ்வெழுத்துக்கள் மொழிக்கண்வருமிடத்து மயங்குவனவாயினும் இதன்நோக்கம் மொழியாக்கம் பற்றிக்கூறுவதாகாது. இது நூன் (எழுத்து) மரபாகலின் அவற்றின் ஒலித்திரிபுகளைக் கூறுதலே என அறிக. |
நூன்மரபு ஒலித்திரிபுகளைப்பற்றிய ஆராய்ச்சியாகலின் தனி யெழுத்துக்களைப் பற்றிய இலக்கணமே இது என்பதை உணர்த்த மெய்ம்மயக்கத்தை இவ்வியலுள் வைத்து ஓதுவாராயினார். மொழியினிடத்து ஒற்றுக்கள் இணைந்து வருதலை மொழிமரபினுள் கூறுதலானும், அறிக. எனவே இம்மயக்கத்தைத் தனிமொழிக்கண் காண்பதா? புணர்மொழிக்கண் காண்பதா? என்னும் ஆய்வுக்கு இடமே இல்லை என்பதும் இதன்பின் இதுவரும் என்னுமளவே கூறுதலின் யாண்டும் |