யகர வகரங்கள் தம் இனத்தொடு தொடர்தலின் ஒலிநிலை திரியாமல் மயங்கும். உம்மை இறந்தது தழுவிய எச்சஉம்மை. |
எ - டு :வில்யாழ் - வெள்யானை - செல்வம் கள்வர் எனவரும். சொல்யாத்தான் - வில்வளைத்தான் எனப் புணர்மொழியுள்ளும் வரும். வில்யாழ், வெள்யானை என்பவை பண்புத்தொகை மொழி. |
இவ்விரண்டு சூத்திரத்தானும் டறக்களின் முன்னர்க் கசப என்பனவும் லளக்களின் முன்னர்க் கசபயவ என்பனவும் தனிமொழி தொடர்மொழிக்கண் இணைந்து நிற்கும் என்பதும் உணர்த்தப்பட்டது. |
சூ. 25: | ஙஞண நமன எனும்புள்ளி முன்னர்த் |
| தத்தம் மிசைகள் ஒத்தன நிலையே |
(25) |
க-து: | மெய்யெழுத்து ஆறன் முன்னர் அவற்றிற்கொத்த வல்லெழுத்து ஆறும் மயங்குமென்கிறது. |
பொருள்:ஙஞண நமன என்னும் புள்ளியெழுத்துக்கள் நிற்க நெடுங்கணக்கினுள் அவ்வவற்றின் மேலிடத்து நிற்கும் வல்லெழுத்துக்கள் நிரலேவந்து இவற்றின் ஓசையொடு மயங்குதற்குப் பொருந்துவனவேயாகும். |
நிலைஒத்தன என மாறுக. நிலையாவது மயங்கும் நிலை. இவை மெல்லெழுத்தொடு தொடர்தலின் தம்வன்மை திரிந்து நிற்குமென்க. |
எ - டு :பொங்கர், தஞ்சம், கொண்டல், பந்தர், ஆம்பல், மன்றல் எனவரும். பெருங்குன்றம், வருஞ்சாத்தன் எனப் புணர்மொழியுள்ளும் கண்டுகொள்க. |
சூ. 26: | அவற்றுள் |
| ணனஃகான் முன்னர்க் |
| கசஞப மயவ அவ் ஏழும் உரிய |
(26) |
க-து: | ணனக்களின் முன்னர்க் கசப என்னும் வல்லெழுத்தும் ஞம என்னும் மெல்லெழுத்தும் யவ என்னும் இடையெழுத்தும் மயங்குமென்கின்றது. |
பொருள்:மேற்கூறப்பெற்ற ஆறனுள் ணகரனகரப்புள்ளிகளின் முன் மேற்கூறிய டகரறகரங்களேயன்றி ஒவ்வொன்றின் முன்னரும் கசஞபமயவ என்னும் ஏழு (உயிர்) மெய்யெழுத்துக்களும் தனித்தனியே வந்து அவற்றின் ஓசையொடு மயங்கற்குரியவாம். |