எ - டு: வண்டு-வெண்சாந்து, வெண்ஞாண், நண்பன், உண்மை, மண்யாப்பு-கண்விழி எனவும், புன்கம்-நன்செய், வின்ஞாண், அன்பன், நன்மை, மென்யாழ், பொன்வளை எனவும் வரும். இவற்றுள் வெண்சாந்து என்றாற்போல இருசொல்லாக உள்ளவை தொகைமொழிகளாம். முரண்டேய்ந்தது - மன்னன்றேறினான் - இறைவன் செயல் எனப் புணர்மொழியுள்ளும் கண்டுகொள்க. |
சூ. 27: | ஞநமவ என்னும் புள்ளி முன்னர் |
| யஃகான் நிற்றல் மெய்பெற் றன்றே |
(27) |
க-து: | ஞநமவ என்பவற்றின்முன் யகரம் மயங்குமாறு கூறுகின்றது. |
பொருள்: ஞநம என்னும் மெல்லெழுத்தின் முன்னும் வ என்னும் இடையெழுத்தின் முன்னும் யகர (உயிர்) மெய்வந்து அவற்றின் ஓசையொடு மயங்குதல் பொருளுடையதேயாம். |
மெய்யென்றது பொருளை. ஈண்டுப் பொருளாவது மயக்க இலக்கணமாம். இம்மயக்கம் தனிமொழிக்கண் நிகழாவாதலின் அதுகருதி ஐயுறற்க என்பார் ‘‘மெய்பெற்றன்றே’’ என்றார். இதனானும் மயக்க இலக்கணம் தனிமொழி தொடர்மொழி என்னும் நியதியின்றி வரும் என்பது புலப்படும். |
எ - டு: உரிஞ்யானை - பொருந்யாக்கை - திரும்யாடு - தெவ்யாழ் எனத் தொகைமொழிக்கண்ணும், உரிஞ்யாது, வெரிந்யாது, சுரம்யாது, தெவ்யாது எனப் புணர்மொழிக்கண்ணும் வரும். |
சூ. 28: | அவற்றுள் |
| மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும் |
(28) |
க-து: | மகரத்தின்முன் வகரமும் மயங்கும் என்கின்றது. |
பொருள்: மேற்கூறியவற்றுள் மகரப்புள்ளியின்முன் யகரமேயன்றி வகர (உயிர்) மெய்யும் வந்து மயங்கும். |
வகரம் வந்து மயங்குங்கால் மகரம் தன் ஒலிகுன்றி உட்பெறுபுள்ளி மகரமாகும் என்பதனை ‘‘வகார மியையின் மகாரம் குறுகும்’’ என்பதனான் அறிக. இதனானும் மயக்கம் என்பது தனி எழுத்தொலி பற்றிய ஆராய்ச்சியே என்பது புலனாகும். |
எ - டு : திரும்வாழ்வு (திரும்பும் வாழ்வு) என்பது வினைத்தொகை மொழி. தரும்வளவன் - நிலம் வலிது எனவரும். இவை புணர்மொழி. இம்மயக்கமும் தனிமொழிக்கண் நிகழாதென அறிக. |