இதுகாறும் ஒரு புள்ளியெழுத்தொடு அதுவல்லாத பிறமெய்கள் வந்து மயங்கும் மயக்கமே பற்றிக் கூறிவந்தமையான் தம்முன் தாம் வருதல் மயக்கமாகாதோ என்னும் ஐயம் நீங்க அதுவும் ஓராற்றான் மயக்கமே என இந்நூற்பாவாற்றெளிவு படுத்தினார் என அறிக. மயக்கம் என்பது வலி, மெலி, இடை என மெய்களுக்கு ஓதப்பெற்ற ஒலிகள் தொடருங்கால் மயங்கி வருதலைப் புலப்படுத்தல். அவ்வாற்றான் அவை இணைந்து தொடரும் என்பதைக் கூறுதலும் (மெய்ம்மயக்க) இலக்கணக் கோட்பாடு என்பது இச்சூத்திரத்தானும் புலப்படும். இதனான் ரழ அல்லாத ஏனைய பதினாறும் தம்முன்தாம் இணைந்து மொழிக்கண் வரும் என்பதும் உணர்த்தப்பட்டது. |
எ - டு:மக்கள், இங்ஙனம், நொச்சி, மஞ்ஞை, வட்டம், அண்ணல், தித்தன், வெந்நீர், கப்பல், வெம்மை, வெய்யர், மல்லல், தெவ்வர், வள்ளல், கொற்றன், கன்னல் எனவரும். |