96நூன்மரபு

சிறுபான்மை  வினாப்பெயரின்   உறுப்பாகவும்    வருதலன்றித்   தனித்து
வாராமையான்  அதனைக்குறியீடு  செய்யாராயினர்.  ஆசிரியர்  ‘‘சுட்டுமுத லாகிய’’ என்றாற்போல  வினா  முதலாகிய என வழங்காமல்  ‘‘எகர முதல் வினாவின்’’   எனக்கூறுதலையும்    எகரமுதல்    வினா   என்றாற்போல அகரமுதற்சுட்டு  என   வழங்காமையும்   காண்க.    ‘‘எவன்’’   என்பது வினைக்குறிப்பு.  எப்பொருள்   என்பது   எஞ்சாமைபொருட்டு.  எதோளி என்பது எங்கு என்னும் இடப்பொருட்டு.
 

இனி   எவன்,   எவள்,  எவர்,  எது,  எவை  என  இடைக்காலத்துத்
தோன்றிய வழக்கு யாவன், யாவள், யாவர், யாது, யாவை என்னும்  வினாப் பெயர்களின் திரிபாகும்.  எங்ஙனம்  என்பது  யாங்ஙனம்  என்பதன் திரிபு. எக்கடல்,  எந்நாடு,  எவ்வீடு,  எவ்வூர்  என்றாற்போல வரும் இடைக்கால வழக்கினைக் “கிளந்த வல்ல  வேறுபிற தோன்றினும்” (இடை. 48) என்னும் புறனடையாற்கொள்க.
 

சூ. 32 :

ஆ ஏ ஓ அம் மூன்றும் வினாஅ

(32)
 

க-து:

உயிர்  நெட்டெழுத்துள்   மூன்றற்குச்  சிறப்புக்  குறியீடு கூறுகின்றது.
 

பொருள்:ஆஏஓ  என்னும்  அம்மூன்று  எழுத்துக்களும்  வினா என
வழங்கப்பெறும். இதுவும் ஆட்சிப்பொருட்டாய இலக்கணக் குறியீடேயாம்.
 

எ - டு :“மாறுகொள்  எச்சமும்  வினாவும்”  (உயிர்மய-22)  எனவும்,
“வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல்” (வினை-47)  எனவும்,  மேல்
ஆளுமாறு கண்டுகொள்க.
 

இனி, யா என்னும்  உயிர்மெய்எழுத்துப்  பன்மை  வினாப்  பெயராயும்
யாவன், யாவள், யாவர், யாது, யாவை என்னும் வினாப்பெயர்ச் சொற்களின்
உறுப்பாயும் வருதலன்றித் தனித்து வினா இடைச்சொல்லாக வாராதென்க.
 

‘யார்’  என்பது  வினாவினைக்   குறிப்புச்சொல்.   யாங்கு - யாண்டை என்பவை இடைச்சொல்லடியாகப் பிறந்த  பெயர்கள். “யாவென்  வினாவின் ஐயென்  இறுதியும்”  (உருபி-3)  “யாவினா   மொழியே”   (குற்-23)  என ஆசிரியர் விதந்தோதுமாறு கண்டு கொள்க.
 

இவ்    இரு  சூத்திரங்கட்கும்  உரையாசிரியன்மார்  கூறும்  உரையும்
விளக்கமும் இந்நூல் நெறிக்கு ஏற்புடையன வாகாமை தெரியலாம்.