சூ. 33: | அளபிறந் திசைத்தலும் ஒற்றிசை நீடலும் |
| உளவென மொழிவ இசையொடு சிவணிய |
| நரம்பின் மறைய என்மனார் புலவர் |
(33) |
க-து: | இயற்றமிழின் கண் எழுத்துக்கள் ஒரோவழி நீண்டிசைப்பதற்கு இசை நூல் முறைமைபற்றி புறனடை கூறுகின்றது. |
பொருள்:பண்ணத்தியாயும், தேவபாணியாயும், பண்ணமைந்த பரிபாடலாயும் வரும் இயற்றமிழ்ச் செய்யுளுள், உயிர் எழுத்துக்கள் நான்கு மாத்திரையினும் கடந்து இசைத்தலும் ஒற்றெழுத்துக்கள் அளபெடையைக் கடந்து இசைத்தலும் உள என்று மொழிவனவற்றை, ஏழிசையொடு பொருந்திய நரம்பினையுடைய யாழ்நூலிடத்தனவாம் என்று கூறுவர் இயற்றமிழாசிரியர். |
அதனான் மாத்திரையளவுதற் பொருட்டும்; இன்னோசையின் பொருட்டும் இயற்றமிழ்ச் செய்யுளுள் எழுத்துக்கள் நீண்டு இசைப்பின் இவ்விலக்கணத்தான் அமைத்துக் கொள்க என்றவாறு. |
ஒற்று எனப் பின்னர் விதந்தமையின் முன்னர் வாளா அளபென்றது உயிரளபினை என்பது பெறப்படும். ஒற்று அளபெடுப்பின் அஃது அலகு பெறுமாதலின் ஒற்றொலி நீடலும் என்னாது இசைநீடலும் என்றார். ‘‘மொழிவ’’ என்பது வினையாலணையும் பெயர். ‘‘இசையொடு சிவணிய’’ என்பது நரம்பிற்கு அடை. நரம்பு (யாழ்) ஆகுபெயர். யாழ்நூல் என்றது இசையிலக்கண நூலினை. மறை = இலக்கணம். இலக்கணத்தை இவ்வாசிரியர் ‘‘மறை‘‘ என ஆளுதலை ‘‘மறையென மொழிதல் மறையோ ராறே’’ (செய்-178) என்பதனானும் அறிக. |
இதனான் நால்வகைப் பாக்களை ஓசைநயம்படக் கூறுதற்கண்ணும், கொச்சகக்கலி, பரிபாடல், பண்ணத்தி ஆகியவற்றைப் பண்ணொடு ஒப்பக்கூறுதற் கண்ணும் உயிரும்-ஒற்றும் மாத்திரையளவு நீண்டிசைக்குங்கால் அவற்றிற்கு இயற்றமிழ் இலக்கணத்துள் விதியின்மையின், அவற்றை இசைத்தமிழிலக்கண முறைமையான் அமைத்துக் கொள்ளவேண்டும் என்பது இச்சூத்திரத்தின் நோக்கும் பயனுமாகும். |
இதனைப் பிறன்கோட்கூறலாகக் கருதின், ஈண்டுக் கூறியதற்கு யாதொரு இயைபுமின்றி ஆசிரியர் பொருளில கூறியதாக முடியுமென்க. பிற, அகல உரையிற் கண்டுகொள்க. |
நூன்மரபு முற்றியது |