98மொழிமரபு

2. மொழிமரபு
 

மொழிமரபு  என்னும் தொகைமொழி,  மொழியினது மரபுகளைக்  கூறும்
இயல் என விரியும் அன்மொழித்தொகை. நூன் மரபிற் கூறிய  எழுத்துக்கள் மொழியாகும்   முறைமையும்,   அவை  மொழிக்கண்  நிற்கும்  நிலையும், மொழிப்பொருள்     மாறாமல்    எழுத்து    மாறிவரும்    போலிமரபும் பற்றிக்கூறுதலின் இவ்வியல் மொழிமரபு எனப்பட்டது.
 

மேற்கூறிய குற்றியலிகரம்  முதலாய  மூன்றும்  சார்ந்துவரல்   மரபின
ஆகலானும், எழுத்தளவினை  நீட்டம்  வேண்டின்  நீட்டுதல்  மொழிக்கண்
நிகழ்தலானும் அவற்றின் இயல்புகளை நூன்மரபின்  ஒழிபாக  இவ்வியலின் தொடக்கத்தில்  முறையாக   வைத்துக்  கூறிப்  பின்னர்  மொழியாக்கமும் போலியும் மொழி முதனிலை இடைநிலை இறுதிநிலைகளும் கூறுகின்றார்.
 

சூ. 34:

குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும்

யாவென் சினைமிசை உரையசைக் கிளவிக்கு

ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே

(1)
 

க-து:

குற்றியலிகரம் தனிமொழிக்கண் சார்ந்து வருமாறு கூறுகின்றது.
 

பொருள்:சார்ந்துவரல் மரபின  எனப்பெற்ற  மூன்றனுள் குற்றியலிகரம் “மியா”   என்னும்   உரையசையிடைச்   சொல்லின்கண்   அச்சொல்லின் உறுப்பாக நிற்கும் யா என்னும் எழுத்திற்குமேல்,  அவ்விடத்து வரும் மகர மெய்யை ஊர்ந்து நிற்குமெனக் கூறுவர் புலவர்.
 

சினை = உறுப்பு.  கிளவிக்கு    என்பது  வேற்றுமைமயக்கம்.  ஏகாரம்
ஈற்றசை. மகரம் பற்றுக்கோடு, யகரம்சார்பு. எ - டு : மியா எனவரும்.
 

இஃது இடைச்சொல்லாகலின் தனித்தியங்க ஒல்லாமல் கேள், செல், உண்
முதலாய  முதனிலை ஏவல் வினைகளை அடுத்துக் கேண்மியா,  சென்மியா,
உண்மியா எனவரும். ‘‘நிற்றல் வேண்டும்’’ என்பது ஒருசொல் நீர்மைத்தாய்
வந்த வழிநூல் வாய்பாடு.