சூ. 35: | புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே உணரக் கூறின் முன்னர்த் தோன்றும் |
|
(2) |
க-து: | குற்றியலிகரம் புணர்மொழியிடத்து வருதலும் வருங்கால் ஒரோவழிக் குறுகுதலும் உண்டு என அதன் மாத்திரையளவிற்குப் புறனடை கூறுகின்றது. |
பொருள்:மேற்கூறிய குற்றியலிகரம், சொற்கள் புணர்ந்தியலும் நிலைமையின்கண் தனக்குரிய அரைமாத்திரையினும் குறுகி ஒலித்தற்கும் உரியதாகும். அங்ஙனம் அது குறுகி ஒலிக்குமிடத்தினை உணரக்கூறின் அவ்விலக்கணம் குற்றியலுகரப் புணரியலுள் விளக்கமாகும். |
குற்றியலிகரம் என்பது அதிகாரத்தான் வந்தது. உம்மை எதிர்மறை. ஏகாரம் ஈற்றசை. முன்னர் என்றது குற்றியலுகரப் புணரியலை. |
எ - டு : (ஆடு யாது)= ஆடியாது (கவடு யாது) = கவடியாது (தொண்டு யாது) = தொண்டியாது எனவரும். உம்மையான் தெள்கியாது, நாகியாது எனக்குறுகாதும் வரும். |
முன்னவை குறுகும் என்பதற்கும் பின்னவை குறுகா என்பதற்கும் காரணம், ஆடி (திங்கள்) கவடி (வெள்வரகு) தொண்டி (ஊர்) என்னும் பெயர்கள் யாது என்னும் சொல்லொடு புணருங்கால் ஆடி + யாது = ஆடியாது. கவடி+யாது = கவடியாது. தொண்டி+யாது = தொண்டியாது எனவரும். ஆதனான், ஆடுயாது (ஆடியாது) ஆடி யாது (ஆடியாது) எனவரும். இரண்டற்கும் வேற்றுமை தெரியக் குற்றியலுகரத்தின் திரிபாகிய (ஆடு-ஆடி) ஆடி என்பதன் மாத்திரையை அரை மாத்திரையினும் குறுக்கி ஒலிக்கவேண்டுமாயிற்றென்க. திங்கட் பெயராய் வரும் ஆடி என்னும் இயல்பீற்றினை ஒருமாத்திரை யளவிற்கு இசைத்தல் வேண்டுமென்க. முன்னதைக் குறுக்காமல் ஒலிப்பின் நிலைமொழி ஆடு என்பதா? ஆடி என்பதா? என்னும் ஐயம் நிகழுமென்க. |
இனித், தெள்கியாது நாகியாது என்பவை குறுகாமைக்குக் காரணம் தெள்கி-நாகி என்னும் இயற்பெயர்கள் இல்லாமையான் நிலைமொழி தெள்கு நாகு என ஐயமின்றி உணரப்படுமாதலான் அரை மாத்திரையிற் குறுகாது ஒலிக்கும். இக்குறுக்கத்தை உணர்த்தும் சூத்திரம் குற்றியலுகரப் புணரியலுள் வரும். ‘‘யகரம் வரும்வழி இகரம் குறுகும் உகரக் கிளவி துவரத் தோன்றாது’’ (குற்-5) என்பதாம். இங்ஙனம் புணர்மொழியிடை வரும் குற்றியலிகரம் இயல்பீறன்றிக் குற்றியலுகரத்தின் திரிபாகவருதலின் ஈண்டுக் கூறாமல் குற்றியலுகரப் புணரியலுள் கூறினார் என்க. |