சூ. 36: | நெட்டெழுத் திம்பரும் தொடர்மொழி ஈற்றும் |
| குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே |
(3) |
க-து: | குற்றியலுகரம் மொழிக்கண் சார்ந்து வருமாறு கூறுகின்றது. |
பொருள்:குற்றியலுகரம் ஈரெழுத் தொருமொழியின்கண் நெட்டெழுத்தின் பின்னரும், இரண்டிறந்திசைக்கும் தொடர் மொழிகளினது இறுதியிலும், ஆறுவல்லெழுத்தினையும் ஊர்ந்து நிற்றல் வேண்டும். நெட்டெழுத்தென்றது உயிர்-உயிர்மெய்கட்குப் பொதுப்பட நின்றது. |
‘நிற்றல் வேண்டு’மென்பது அதிகார முறைமையான் வந்தது. தொடர்மொழி எனப் பின்னர் விதந்தமையான் நெட்டெழுத்தென்றது ஈரெழுத்தொரு மொழியை உணர்த்திற்று. இத்தொடர்மொழி ஐவகைப்படும் என்பது குற்றியலுகரப் புணரியலுள் பெறப்படும். |
நெட்டெழுத்தும் தொடர்மொழி எழுத்துக்களும் சார்பு; வல்லெழுத்துக்கள் பற்றுக்கோடு. இம்பர் என்றும், மொழியிறுதி என்றும் கூறியதனான் இது மொழியிறுதிக்கண்வரும் குற்றியலுகரம் என்பது வெளிப்படை. மொழிமுதற் குற்றியலுகரம் பின்னர்க் கூறுவார். மெல்லெழுத்துக்கள் மூக்கின் வளியிசையான் வெளிப்படலானும், இடையெழுத்துக்கள் உயிர்ப்புச் சிறிது இயைய வெளிப்படலானும், தடையொலியாகிய வல்லெழுத்துக்களுக்கே இவ்வுகரம் உயிர்ப்புத் துணையாக வருதலின் ‘‘வல்லாறூர்ந்தே’’ என்றார். |
எ - டு : காடு எனவும், வரகு, பலாசு, தேக்கு, வண்டு, உலகு, எஃகு எனவும் வரும் |
சூ. 37: | இடைப்படின் குறுகும் இடனுமா றுண்டே |
| கடப்பா டறிந்த புணரிய லான |
(4) |
க-து: | குற்றியலுகரம் புணர்மொழிக்கண் வருதலும் வருங்கால் ஒரோவிடத்துக் குறுகி நிற்றலும் உண்டு எனக் குற்றியலுகரத்தின் மாத்திரைக்குப் புறனடை கூறுகின்றது. |
பொருள்: மேற்கூறிய குற்றியலுகரம் நெறிமுறை அறிதற்குரிய புணர்ச்சி இயல்பினான் இருமொழிகளுக்கு இடையே நிற்பின் தனது அரைமாத்திரையளவினும் குறுகி ஒலிக்கும் பக்கமும் உண்டெனக் கூறுவர் புலவர். |
‘இடனும்’ என்னும் எதிர்மறை உம்மை, குறுகாது நிற்குமிடம் பெரும்பான்மை என்பதை உணர்த்திநின்றது. ஏகாரம் ஈற்றிசை. |