முடியும் விகார எழுத்துக்கள் என்ற செய்தி உய்த்துணர வைக்கப் பட்டதனைச் சுட்டியுள்ளார். நூ.47: மானம் என்ற சொற்பொருள் விளக்கம் கண்டுணரத்தக்கது. நூ.48: ஈரொற்றுடனிலை ஒரு சொற்கண் வருவதேயாகும் என்பதும் ஈரொற்று, மொழியின் இடைநிற்கும் ஈரொற்றுக்களே என்பதும் தெளிவுறுத்தப்பட்டுள்ளன. நூ.52: ஒரு மொழியுள் மெல்லினமே மகரங் குறுகுதற்குச் சார்பு என்ற நுணுக்கமான செய்தி இயம்பப்பட்டுள்ளது. நூ.53: ‘மொழிப்படுத்திசைத்தல்’ விரிவாக விளக்கப்பட்டுள்ளது. நூ.54, 55: மொழி முதற்கண் வரும் மாற்றெழுத்துப் பற்றியன. நூ. 56, 57: மொழியிடையில் வரும் மாற்றெழுத்துப் பற்றியன. நூ. 58: மொழி இறுதிக்கண் வரும் மாற்றெழுத்துப் பற்றியது என்ற செய்திகள் விரிவான விளக்கம், எடுத்துக்காட்டுக்கள், கடா விடைகள் முதலியவற்றான் விளக்கப்பட்டுள்ளன. நூ. 59: ஓரெழுத்தொரு மொழி என்பது கசடற விளக்கப்பட்டுள்ளது. நூ. 60: ‘உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா’ என்ற இந்நூற்பா உரையிலும் ஆசிரியர் மெய், புள்ளி, உயிர்மெய் என்பன பற்றித் தாம் கொண்டுள்ள கொள்கையை நிறுவுகிறார். நூ. 68: ஒரே சொல் குற்றியலுகர ஈற்றதாகவும் முற்றியலுகர ஈற்றதாகவும் பொருள் வேறுபாட்டோடு வரும் செய்தி நன்கு விளக்கப்பட்டுள்ளது. நூ. 79, 80, 81: ஞகர நகர வகர ஈற்றுத் தமிழ்ச் சொற்கள் வரையறுக்கப் பட்டதன் காரணத்தை ஆசிரியர் குறிப்பிடுகின்றார். |