நிற்றல் வேண்டுமென்பது அதிகரித்தது. குற்றெழுத்தும் உயிர்மெய் வல்லெழுத்தும் சார்பு. ஆய்தம், உயிரும் ஒற்றுமாகிய இருதன்மையும் உடையதாகலின் பற்றுக்கோடு வேண்டிலது. அச்சார்புகளே பற்றுக்கோடாயும் நிற்குமென்க. எனவே தனிமொழியாயினும் புணர் மொழியாயினும் யாண்டும் இவற்றினிடையேதான் வருமென்றறிக. ஒலி ஒற்றுமை கருதிக் குற்றியலிகரத்தையும் குற்றியலுகரத்தையும் உயிரெனக் கூறினார். |
எ - டு : எஃகம், கஃசு, முஃடீது, அஃதை, கஃபு, பஃறி, மஃகான், வெஃகாமை எனத் தனிமொழிக்கண்ணும் அஃறிணை, அஃகடிய, எஃகியாது, கஃசியாது எனப் புணர்மொழிக்கண்ணும் வரும். |
கஃசு எஃகு அஃது என்பவை தனித்து நிற்புழி முற்றியலுகரமாக நிற்றற்கும் ஏற்குமாதலின் பொதுப்பட “உயிரொடு புணர்ந்த வல்லாறு’’ என்றார். ஆய்தப்புள்ளியின் பிற இயல்புகளை வருஞ்சூத்திரங்களாற் கூறுப. |
சூ. 39: | ஈரியல் மருங்கினும் இசைமை தோன்றும் |
(6) |
(ஈறியல் மருங்கினும் என்பது உரையாசிரியன்மார் பாடம்) |
க-து: | ஆய்த எழுத்தின் இயல்பாமாறு கூறுகின்றது. |
பொருள்: முப்பாற்புள்ளியாகிய அவ்ஆய்தஎழுத்தினது இசைமை, உயிரினது மருங்காகவும், ஒற்றினது மருங்காகவும் தோன்றிவரும். |
இசைமை = எழுத்தாகஇசைக்குந்தன்மை. ஈரியல் = உயிரியல்பும் ஒற்றியல்பும். உயிரியல்பாவது : இசைத்துச் செய்யுளின்கண் அலகுபெற்று வருதல். ஒற்றியல்பாவது: ஒலித்து அலகு பெறாது அசைக்கு உறுப்பாகி வருதல். |
எ - டு : | அற்றால் அளவறிந் துண்க வஃதுடம்பு |
| பெற்றான் நெடிதுய்க்கு மாறு |
| வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை |
| யாண்டு மஃதொப்ப தில் |
என உயிரியல்மருங்காய் அலகுபெற்று நின்றது. |
| தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார் |
| தோன்றலிற் றோன்றாமை நன்று |
| அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் |
| வெஃகி வெறிய செயின் |
என அலகுபெறாது அசைக்கு உறுப்பாய் ஒற்றியல் மருங்காய் நின்றது. |