இவ்வாய்தம் உயிரைப்போல மெய்யினை ஊர்வதும் மெய்யினைப்போல உயிரினை ஏற்பதும் இன்றாதலின் ஈரியலானும் தோன்றும் என்னாது ஈரியல் மருங்கினும் என்றார். மருங்கு என்றது ஒருபுடை என்னும் பொருள்பட நின்றது. |
இதனை ‘ஈறியல் மருங்கினும்’ என்றோதி ஆய்தம் புணர் மொழியிடத்தும் தோன்றும் எனப் பொருள்கூறி, ஆண்டு அஃது குறுகுமென்றும் விளம்பிக் கஃறீது முஃடீது என எடுத்துக் காட்டுவர் உரையாசிரியன்மார். அவ்வுரையினை ஓராது ஏற்ற பவணந்தியார், |
| ‘‘லளவீற் றியைபினாம் ஆய்தம் அஃகும்’’ |
எனக்கூறி அதற்குஆய்தக்குறுக்கமெனப் பெயரிட்டு அதனையும் ஒருசார்பெழுத்தாகப் படைத்துச் சென்றார். |
ஒருசொல்லின் இடையேயன்றி ஈற்றில் வாராத ஙகரம் டகரம் போல்வன மரம் + குறிது = மரங்குறிது எனவும் பொருள் + குறை = பொருட்குறை எனவும், ஙகர டகரங்கள் மகர ளகரங்களின் திரிபாக வந்தமைபோலக் கஃறீது முஃடீது என்பவை லகர ளகரங்களின் திரிபாதலன்றி ஆய்தப் புணர்ச்சியாகா என்பது வெளிப்படை. அஃகடிய என்பதும் அவ்வாறே வந்த வகர ஈற்றுத்திரிபாகும். |
இச்சூத்திரத்தின் நுட்பமும் பயனும் ஓராமல் புணர்மொழி ஆய்தம் என்னும் திரிபுணர்ச்சியான் ‘‘ஈறியல்’’ எனப்பாடங் கொண்டமை பிழையாதல் தெளியலாம். பிறவிளக்கங்களை எனது சார்பெழுத்து ஆய்வுக்கட்டுரையுட் கண்டுகொள்க. |
சூ. 40: | உருவினும் இசையினும் அருகித் தோன்றும் |
| மொழிக்குறிப் பெல்லாம் எழுத்தி னியலா |
| ஆய்த மஃகாக் காலை யான |
(7) |
க-து: | ஆய்தத்திற்குக் கூறிய அளவாகிய அரைமாத்திரையினும் மிக்கு ஒரோவழி வரும் இடங்கூறுமுகத்தான் அதன் மாத்திரைக்குப் புறனடை கூறுகின்றது. |
பொருள்: ஏனை எழுத்துக்களைப் போல நடவாத (தனித தன்மையுடைய) ஆய்தம், தனக்குரிய அரைமாத்திரையளவில் ஒடுங்கிநில்லாமல் சிறிது மிக்கொலிக்குங்கால், நிறம் பற்றியும் ஓசை பற்றியும் வரும் சொல்லகத்துச் சிறுபான்மையாகத் தோன்றி வரும்; அவையெல்லாம் குறிப்புமொழிகளாமெனக் கூறுவர் புலவர். |