நூன்மரபு105

குற்றெழுத்து  நின்று  இசை   நிறைக்கும்  என்றதனான், அது பொருள்
பயவாது என்பது  பெறப்படும்.   அதனான்  நெட்டெழுத்தின்  ஓசையொடு
குற்றெழுத்தின் இசையைச்  சேர்த்து  நீட்டிக்கொள்க  என்பது  கருத்தாதல்
உணரப்படும். எழுத்தென்றது ஒலிஉருவை. வரிவடிவின்கண் அடையாளமாக
அமையும்.
 

எ - டு:

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை 

ஆஅதும் என்னு மவர் (குறள்-365) எனவரும்.
 

தமிழ்மொழியில்  மூன்று  மாத்திரை  நான்கு  மாத்திரை  எழுத்துக்கள்
வகுக்கப்படாமையின்  ஒத்த  குற்றெழுத்து  இசை  நிறைக்கும்    என்றும்,
இங்ஙனம்   அளபெடுப்பது    நெட்டெழுத்தே    என்றும்     அறிவிக்க
‘நெட்டெழுத்திம்பர்’ என்று கூறினார்.
 

ஒத்த  குற்றெழுத்து   என    ஈண்டு    ஒருமைவாய்பாட்டாற்   கூறி
நூன்மரபின்கண் “அவ்வளபுடைய   கூட்டி     எழூஉதல்”   என்றதனான்
குற்றெழுத்தின்  ஓசை   ஒவ்வொன்றாக   இணைந்திசைக்கும்    என்பதும்
அவ்வாறே   வரிவடிவம்    எழுதிக்     கொள்ள    வேண்டுமென்பதும்
உய்த்துணரவைத்தார்.
 

எ - டு:

உறாஅர்க் குறுநோய் உரைப்பாய்க் கடலைச்

செறாஅஅய் வாழிய நெஞ்சு (குறள். 1200) எனவரும்.
 

இயற்றமிழ்ச்  செய்யுட்கண் நான்கு  மாத்திரையினும் ஓர் எழுத்துமிகாது
என்க.
 

சூ. 42:

ஐ ஒள என்னும் ஆயீ ரெழுத்திற்கு

இகர உகரம் இசைநிறை வாகும்

(9)
 

க-து:

ஐகார ஒளகாரங்கள் அளபெடுக்கும் முறைமை கூறுகின்றது.
 

பொருள்:  இனக்குற்றெழுத்தில்லாத   ஐகாரம்   ஒளகாரம்   என்னும்
அவ்இரண்டெழுத்திற்கு முறையே இகரமும் உகரமும் ஒத்த  குற்றெழுத்தாய்
இசைநிறைவு செய்யும்.
 

மேல்நூற்பாவில்     ஒத்த    குற்றெழுத்து   என    விதந்தமையான்
இனக்குற்றெழுத்தில்லாத   ஐகார   ஒளகாரங்களைப்பற்றி   எழும்   ஐயம்
நீங்க   இகர   உகரம் இசை நிறைவாகும் என்றார். அதனான் இவ்இரண்டு
உயிரெழுத்துக்களும் அகரத்திற்றொடங்கி முறையே   இகர   உகரங்களாகி
முடியும் விகார எழுத்துக்கள் என்பதை உய்த்துணரவைத்தார் என்க.
 

எ - டு:

ஐஇ-கைஇ எனவும் ஒளஉ - வௌஉ எனவும் வரும்.